- அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைச்சர் ஆய்வு :

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் நேற்று ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆய்வு செய்தார்.

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கை குறித்தும், தொழிற்பயிற்சி நிலையம்மேம்பாடு குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். முதல்வர் அறிவுறுத்தலின்படி தொழிற்பயிற்சி நிலையங்கள் அனைத்திலும் குறைந்தபட்சம் ஆயிரம் மாணவர்களும், அதிகபட்சம் 2 ஆயிரம் மாணவர்களும் சேர்க்கையில் கட்டாயமாக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அறிவுறுத்தினார். மேலும் மாணவர்களுக்கு திறன் குறித்து அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வைத்துள்ள கனரக வாகனம் நல்ல நிலையில் உள்ளதா என்று அமைச்சர் சிறிது தூரம் இயக்கி சோதனை மேற்கொண்டார். தமிழகத்திலேயே 3-வது பெரிய அரசு தொழிற்பயிற்சி நிலையமான செங்கல்பட்டு தொழிற்பயிற்சி நிலையத்தில் 900 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

மேலும், நிலையத்தில் கழிப்பறைகள், பயிற்சி கொடுக்கும் தொழிற்கூடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து பழுதடைந்து உள்ள இயந்திரங்களை தயார் செய்யவும், கூடத்தில் உடைந்த ஓடுகளை மாற்றவும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர், பயிற்சி மாணவர்களை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, மாணவர்களுக்கு தங்கும் விடுதிகள் கட்டப்படும் என்று உறுதியளித்தார்.

இந்த ஆய்வின்போது வேலைவாய்ப்பு, பயிற்சி இயக்குநர் வீரராகவன், இணை இயக்குநர் ராஜசேகர், மாவட்ட ஆட்சியர்ராகுல்நாத், அரசு தொழிற்பயிற்சிநிலைய துணை இயக்குநர் விஜயமாலா ஆகியோர் உடனிருந்தனர்,

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தையும் ஆய்வு செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்