செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் நாளை (அக்.20-ம் தேதி) பதவி ஏற்றுக் கொள்கிறார்கள்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு அண்மையில் தேர்தல் நடத்தப்பட்டது. ஊராட்சித் தலைவர், உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்கு நேரடியாக வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடந்தது.
ஏற்பாடுகள் தீவிரம்
இம் மாவட்டத்தில் மொத்தம் 3,208 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 197 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 3,011 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் நாளை (அக்.20) பதவி ஏற்றுக் கொள்கிறார்கள். பதவியேற்பு நிகழ்ச்சிகள் ஊராட்சி அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகங்களில் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி நிர்வாகங்கள் செய்து வருகின்றன.
8 ஒன்றிய குழு தலைவர் பதவிகளை பிடிக்க திமுகவினரிடையே கடும் போட்டி
செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களில், ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு, திமுகவினரிடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், 154 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில், திமுக 95 இடங்களிலும், அதிமுக 39 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும், பாமக 2 இடங்களிலும், மதிமுக, காங்கிரஸ் தலா ஓர் இடத்திலும், விசிக 2 இடங்களிலும், சுயேச்சைகள் 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில் 8 ஊராட்சி ஒன்றியங்களில், ஒன்றியக் குழு தலைவர் பதவி, துணை தலைவர் பதவி திமுக வசமாகிறது. ஆனால், ஒன்றிய குழு தலைவர் பதவியை பெற, திமுகவினரிடையே கடும் போட்டி நிலவுகிறது. ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்ற பல திமுகவினர் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசனிடம் தலைவர் பதவி கேட்டு படையெடுத்து வருகின்றனர். அதேபோல் திமுகவின் முக்கிய தலைமை நிர்வாகிகளை சந்தித்து தங்களுக்கு தலைவர் பதவி வேண்டுமென கேட்டு வருகின்றனர். வரும் 22-ம் தேதி, ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற துணை தலைவர் ஆகியோருக்கு, மறைமுக தேர்தல் நடக்கிறது. இதில் முடிவு தெரியவரும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago