மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வந்தவர்களுக்கு சுகாதாரத் துறை சார்பில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பஸ், ரயில் நிலையங்கள் உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. மேலும் மாநகராட்சி, கிராமப் பஞ்சாயத்துகளில் செவிலியர்கள் வீடுதேடிச் சென்று முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணி களுக்குக் கரோனா தடுப்பூசி போடுகின்றனர்.
அதனால் மாநகராட்சியில் 40 சதவீதம் வார்டுகளில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி போடும் இலக்கு எட்டப்பட்டுள்ளது. அதேபோல் கிராமப் பஞ்சாயத்துகள், பேரூராட்சிகள், நகராட்சிகளில் பெரும்பாலான பகுதிகளில் நூறு சதவீதம் பேர் கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 18 லட்சத்து 50 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்துக்கு வந்த பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை சார்பில் ஆதார் கார்டு நகல் பெற்றுக் கொண்டு கரோனா தடுப்பூசி போட்டனர்.
மனு கொடுக்க வந்த பொதுமக்கள், குறைதீர் கூட்டத்துக்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸார் ஆர்வமாகக் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago