கரோனா கட்டுப்பாடுகள் நீங்கியதை தொடர்ந்து - குலசேகரன்பட்டினத்தில் குவிந்த பக்தர்கள் : பல்வேறு வேடங்களுடன் வந்து சுவாமி தரிசனம்

By செய்திப்பிரிவு

குலசேகரன்பட்டினம் அருள்தரும்முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் கோயில் தசரா திருவிழா நிறைவுபெற்ற நிலையில், கரோனா கட்டுப்பாடுகள் நீங்கியதை தொடர்ந்து நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்தியாவின் சிறப்புமிக்க திருவிழாக்களில் ஒன்றான குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா அக்டோபர் 6-ம் தேதிகொடியேற்றத்துடன் தொடங்கியது. அக்டோபர் 15-ம் தேதி நள்ளிரவு சூரசம்ஹாரம் நடைபெற்றது.அக்டோபர் 16-ம் தேதி கொடியிறக்கம், காப்பு களைதலுடன் விழா நிறைவு பெற்றது.

கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் தசராவிழாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி, கொடியேற்றம், சூரசம்ஹாரம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. மேலும், அக்டோபர் 8, 9, 10, 15, 16, 17 ஆகிய நாட்களிலும் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. விழாவின் மற்ற நாட்களில் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

குலசேகரன்பட்டினம் தசரா விழா மிகவும் பிரசித்திபெற்றதாகும். விழாவின் முக்கிய நாட்களான கொடியேற்றம், சூரசம்ஹாரம், காப்பு களைதல் ஆகிய நிகழ்வுகளில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். ஆனால், இந்த ஆண்டு கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பங்கேற்க முடியாமல் போனது. பக்தர்கள் தங்களது ஊர்களில் உள்ள கோயில்களிலேயே காப்பு களைந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், தொடர்ச்சியாக விதிக்கப்பட்ட தடைகள் நேற்று தளர்த்தப்பட்டன. பக்தர்கள் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு முதலே ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் குலசேகரன்பட்டினம் கோயிலுக்கு வரத் தொடங்கினர். நேற்று காலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தாங்கள் அணிந்திருந்த வேடத்துடன் குலசேகரன்பட்டினத்தில் குவிந்தனர்.

பல்வேறு வேடங்களுடன் கைகளில் தீச்சட்டி ஏந்தி ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து, அம்மனுக்கு காணிக்கை செலுத்தினர். நேற்று காலை முதல்இரவு வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், குலசேகரன்பட்டினம், உடன்குடி பகுதி முழுவதும் தசரா பக்தர்களாக காட்சியளித்தனர். மேலும், ஏராளமான வாகனங்கள் வந்ததால் உடன்குடி, குலசேகரன்பட்டினம் பகுதிகளில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேபோல், இன்னும் ஓரிரு நாட்கள் குலசேகரன்பட்டினத்துக்கு பக்தர்கள் வருகை அதிகமாகஇருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கோயில் நிர்வாகம்மற்றும் காவல் துறை சார்பில்பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்