பொறியியல் படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு - 89,187 மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீடு : அக்.20-ம் தேதி துணை கலந்தாய்வு

By செய்திப்பிரிவு

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு நேற்றுடன் முடிவடைந்தது. இதன்மூலம் 89,187 மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, துணை கலந்தாய்வு வரும் 20-ம் தேதி நடக்கிறது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 440 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. நடப்பு கல்வி ஆண்டில் இந்தக் கல்லூரிகளில் பிஇ, பிடெக்படிப்புக்கு ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்களுக்கு ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 33 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. அவர்களின் தரவரிசைப் பட்டியல் கடந்த செப். 14-ம் தேதி வெளியிடப்பட்டது.

முதல்கட்டமாக விளையாட்டு வீரர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியசிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு செப்டம்பர் 15 முதல் 24-ம் தேதி வரை இணையவழி வாயிலாக நடந்தது. இதன்மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் 5,972 பேர் உட்பட 6,442 பேர் ஒதுக்கீட்டு ஆணை பெற்றனர்.

இதைத் தொடர்ந்து, பொதுப் பிரிவினருக்கான இணையவழி கலந்தாய்வு (அகாடமிக் மற்றும் தொழிற்கல்வி) செப்.27-ம் தேதி தொடங்கியது. 4 சுற்றுகளாக நடத்தப்பட்ட கலந்தாய்வு நேற்றுடன் முடிவடைந்தது.

முதல் சுற்றில் 11,185 பேருக்கும், 2-வது சுற்றில்20,363 பேருக்கும், 3-வது சுற்றில்23,327 பேருக்கும் 4-வது சுற்றில்26,515 பேருக்கும் என மொத்தம்89,187 பேருக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் டி.புருசோத்தமன் தெரிவித்தார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் 7,324 பேரும், சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவில் (அரசுப்பள்ளி மாணவர்கள் தவிர்த்து) 473 பேரும் இடம் கிடைக்கப் பெற்றுள்ளனர்.

62,683 இடங்கள் காலி

பொறியியல் மாணவர் சேர்க்கையில் முதல்கட்ட கலந்தாய்வின் நிறைவில் 62,683 காலியிடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்காக நடத்தப்படும் துணை கலந்தாய்வு, வரும் 20-ம் தேதி நடக்க உள்ளது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நேற்று முடிவடைந்த நிலையில், வரும் 19-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் தரவரிசைப் பட்டியல் 20-ம் தேதி வெளியிடப்பட்டு அன்றைய தினமே கலந்தாய்வு நடத்தப்படும். அவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு 22-ம் தேதி வழங்கப்பட்டு, இறுதி ஒதுக்கீடு 23-ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்