தொடர் விடுமுறையால் - ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் : தடையை மீறி ‘சினிபால்ஸில்’ குளியல்

ஆயுதபூஜை தொடர் விடுமுறையை தொடர்ந்து நேற்று ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. தடையை மீறி பயணிகள் சினிபால்ஸில் குளித்து மகிழ்ந்தனர்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் பரிசல் பயணம், எண்ணெய் மசாஜ், அருவி மற்றும் ஆற்றில் குளியல், பாரம்பரிய முறையில் சமைத்துக் கொடுக்கப்படும் மீன் உணவுகள் போன்றவை பிரபலம். இவற்றை ரசித்து மகிழ தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரள, கர்நாடக, ஆந்திர உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பயணிகள் வருகை தருவர். இடையில், கரோனா தொற்று பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கால் ஒகேனக்கல்லில் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில், பல்வேறு நிபந்தனைகளுடன் அண்மையில் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு ஒகேனக்கல்லை சுற்றிப் பார்க்கவும், பரிசல் பயணம் செல்லவும், சமையல் கூடத்தில் உணவு சமைத்துக் கொடுக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. அனுமதியை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வரத் தொடங்கினர். வார நாட்களில் குறைந்த அளவு பயணிகளே வருகை தந்த நிலையில், ஆயுதபூஜை தொடர் விடுமுறையை தொடர்ந்து நேற்று ஒகேனக்கல்லுக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் வந்திருந்தனர். பயணிகள் பரிசல் பயணம் மேற்கொண்டும், பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தும் மகிழ்ந்தனர்.

அருவி மற்றும் காவிரியாற்றில் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கவில்லை. இதனால், பிரதான அருவிக்கு செல்லும் பாதை பூட்டப்பட்டிருந்தது. இதனிடையே, பரிசல் துறையில் இருந்து பரிசல் மூலம் குறிப்பிட்ட தூரம் வரை சென்ற பயணிகள் தடையை மீறி சினிபால்ஸ் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

மேலும், “அருவியில் குளிக்க பயணிகளுக்கு அனுமதியளிக்க வேண்டும்” எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதேநேரம் பயணிகள் கூட்டம் அதிகம் இருப்பதால், கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயணிகள் கூட்டம் அதிகம் இருந்ததால், ஒகேனக்கல் போலீஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்