அதிமுக பொன்விழா ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு மத்திய மண்டலத்தில் - எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிப்பு : இனிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கி அதிமுகவினர் கொண்டாட்டம்

By செய்திப்பிரிவு

அதிமுக பொன்விழா ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் நேற்று எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதிமுக பொன்விழா ஆண்டு தொடக்க விழா திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் மாவட்டச் செயலாளர் ப.குமார் தலைமையில் லால்குடி சிவன் கோயில் அருகில் மற்றும் திருவெறும்பூர் வடக்கு பிள்ளையார் கோயில் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர்கள் நடேசன், சிவக்குமார், அசோகன், ராஜாராம், ராவணன், கோவிந்தராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்டச் செயலாளர் மு.பரஞ்ஜோதி தலைமையில் சோமரசம்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் சிலை மற்றும் அண்ணா, ஜெயலலிதா படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் கே.கே.பாலசுப்பிரமணியன், எஸ்.வளர்மதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில் மாவட்ட நீதிமன்றம் அருகில், மரக்கடை, மேலச் சிந்தாமணி, சுப்பிரமணியபுரம் ஆகிய இடங்களில் உள்ள எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.

கரூர் லைட்ஹவுஸ் முனையில் உள்ள எம்ஜிஆர், அண்ணா, ஜெயலலிதா சிலைகள், வெங்கமேட்டில் உள்ள எம்ஜிஆர், அண்ணா சிலைகள், அதிமுக மாவட்ட அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை ஆகியவற்றுக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.

அரியலூரில் பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு முன்னாள் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல, ஜெயங்கொண்டம், தா.பழூர், திருமானூர், செந்துறை பகுதிகளில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கும் அதிமுகவினர் மாலை அணிவித்தனர்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக மாவட்டச் செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். தொடர்ந்து, கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து, பணமுடிப்பு வழங்கப்பட்டது. இதில், முன்னாள் எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக நகரச் செயலாளர் க.பாஸ்கர் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். புதுக்கோட்டை கிழக்கு 2-ம் வீதியில் முன்னாள் நகராட்சித் தலைவர் ஆர்.ராஜசேகர் தலைமையில் அதிமுக கொடியேற்றப்பட்டது.

நாகை மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாவட்ட அவைத் தலைவர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான ஓ.எஸ்.மணியன் பங்கேற்று, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். பின்னர், கட்சி தொண்டர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். சம்பா தோட்டத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு நாகூர் நகரச் செயலாளர் செய்யது மீரான் மாலை அணிவித்தார்.

மயிலாடுதுறை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை மற்றும் பல்வேறு இடங்களில் எம்ஜிஆர் படங்களுக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பவுன்ராஜ் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் ரயிலடியில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கும்பகோணத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக நகரச் செயலாளர் ராமநாதன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

இதேபோல, மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலும் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள், படங்களுக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து, கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு, நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

பேராவூரணியில் எம்ஜிஆர் சிலைக்கு யார் முதலில் மாலை அணிவிப்பது என்பது தொடர்பாக, முன்னாள் எம்எல்ஏக்கள் கோவிந்தராசு தரப்புக்கும், திருஞானசம்பந்தம் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்