ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக - பாலாறு அணைக்கட்டில் வெள்ளம் : மலர் தூவி வரவேற்ற அமைச்சர் ஆர்.காந்தி

By செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை காரணமாக பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள நீரை அமைச்சர் ஆர்.காந்தி மலர் தூவி வரவேற்றார்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பேத்தமங்கலா, ராமசாகர் அணை நிரம்பியுள்ளன. அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வரும் வெள்ள நீர் பாலாற்றில் கரைபுரண்டு ஓடுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து மழைநீரை வரவேற்கின்றனர்.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் தெங்கால் ஊராட்சி பகுதியில் பாலாற்றில் செல்லும் மழை நீர் மற்றும் வாலாஜா பாலாறு அணைக்கட்டில் பாய்ந்தோடி வரும் மழை வெள்ள நீரை தமிழக கைத்தறி துறை மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் நேற்று மலர் தூவி வரவேற்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில்557 ஏரிகள் உள்ளன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 369 ஏரிகளும், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் 188 ஏரிகளும் உள்ளன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 369 ஏரிகளில் நேற்றைய நிலவரப்படி 4.88 டிஎம்சி தண்ணீர் நிரம்பியுள்ளது. இதில், 82 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. பாலாறு அணைக்கட்டில் 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துக்கொண்டியிருக்கிறது.

இதன் மூலம் 2,500 கன அடிதண்ணீர் காவேரிப்பாக்கம், மகேந்திரவாடி, கோவிந்தவாடி ஏரிகளுக்கு திருப்பி விடப்பட்டு வருகிறது. 3,500 கன அடி தண்ணீர் பாலாற்றில் திறந்து விடப்படுகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரியில் 28.8 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. ஏரிக்கு வரும் 487 கன அடி நீர் பாதுகாப்பு கருதி அப்படியே ஏரியின் கீழ்பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள் ளனர்.

பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அதை வேடிக்கை பார்க்கவோ, நீரில் இறங்கி குளிக்கவோ யாரும் ஈடுபடக்கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்