தாளம் தப்பாமல் மிருதங்கம் வாசிப்பதிலும், தேவாரம் பாடுவதிலும் தடம் பதித்து வருகிறார் ஆட்டிசம் பாதித்த ராமநாதபுரம் இசைப்பள்ளி மாணவர் விக்னேஷ்.
ராமநாதபுரம் புளிக்காரத் தெருவைச் சேர்ந்த நாகராஜன் - செல்வி தம்பதியின் மகன் விக்னேஷ்(27). ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட இவருக்கு 7 வயதுக்கு உரிய மன வளர்ச்சியே உள்ளது.
விக்னேஷ் 8-ம் வகுப்பு வரை தாயாாின் துணையுடன் பள்ளி சென்று வந்துள்ளார். இந்நிலையில், இசை மேல் அவருக்கு இருந்த ஆர்வத்தை அறிந்து, ராமநாதபுரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மிருதங்க வகுப்பில் அவரது தாயார் சேர்த்துள்ளார். மூன்று ஆண்டு மிருதங்கப் பயிற்சியை நிறைவு செய்துவிட்டு, தனது குருநாதர் லட்சுமணனுடன் பக்கவாத்திய கலைஞராக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். தற்போது தேவாரம், தவில் ஆகிய கலைகளை கற்று வருகிறார். தேவாரம் பாடுவதிலும், மிருதங்கம் வாசிப்பதிலும் சிறப்பாகத் தடம் பதித்து வருகிறார்.
விக்னேஷின் தாயார் செல்வி கூறியதாவது: தற்போது தனியாக இசைப்பள்ளிக்கு சென்றுவரும் அளவுக்கு அவனுக்கு தன்னம்பிக்கை வந்துள்ளது. வசதி இல்லாததால் சொந்தமாக மிருதங்கம் கூட வாங்கித் தர முடியவில்லை. இதனால் பயிற்சிக்காக தவறாமல் இசைப் பள்ளிக்குச் சென்று விடுவான்.
அரசு சார்பான விழாக்களில் மேடையேற்ற வாய்ப்பு வழங்கினால் ஆட்டிசம் பாதித்தவர்களும் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்க முடியும் என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago