சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள கிராம மக்கள் எதிர்ப்பால் விரிவாக்கம் செய்யாமலேயே தற்போதைய நிலையிலேயே நகராட்சியானது.
மானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சி 18 வார்டுகளுடன் 5.6 சதுர கி.மீ. பரப்பு கொண்டது. இங்கு 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 32,257 பேர் உள்ளனர். தற்போது 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஆண்டு வருவாய் ரூ.6 கோடியைக் கடந்து விட்டது.
இந்நிலையில் சட்டப்பேரவை யில் மானாமதுரை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மானாமதுரை நகராட்சியை விரிவாக்கம் செய்யும் வகையில் அதையொட்டி உள்ள கல்குறிச்சி, கீழமேல்குடி, செய்களத்தூர், மாங்குளம், கீழப்பசலை, சூரக்குளம்-பில்லறுத்தான் ஆகிய ஊராட்சிகளில் சில பகுதிகளை இணைப்பது குறித்து ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தலைமையில் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால் ஊராட்சி பகுதிகளை சேர்ப்பதற்கு பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி அரசுக்கு அறிக்கை அனுப்பினார். மேலும் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டியுள்ளதால் உடனடியாக புதிய நகராட்சிகளின் எல்லைகளை அறிவிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது.
இதையடுத்து மானா மதுரையை தற்போதைய நிலையிலேயே நகராட்சியாக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அதன் அடிப்படையிலேயே வார்டு களை வரையறை செய்வது, அருகேயுள்ள ஊராட்சிகளை இணைப்பது குறித்து பிறகு பரிசீலிப்பது என அரசு முடிவு செய்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago