யூனிட் ரூ.2.61 என குறைந்த விலையில் 1,000 மெகாவாட் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) கரூர் கிளை மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழில் முனைவோருக்கு அரசு மானியத்துடன் கடன் வழங்குதல், தொழில் நிறுவனங்களுக்கு ஒரு முனையில் புதிய உரிமங்கள் பெற ஒற்றைச் சாளர கண்காணிப்பு இணைய சேவை தொடக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் கரூரில் நேற்று நடைபெற்றன.
இதில், 100 பேருக்கு ரூ.34.01 கோடியில் ரூ.8.18 கோடி மானியத்துடன் கூடிய கடன் ஆணையை வழங்கி, ஒற்றைச் சாளர இணை சேவையை தொடங்கிவைத்து அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசியது:
தமிழகத்தின் மின் தேவைக்கும், மின் உற்பத்திக்கும் இடையேயான இடைவெளி 2,500 மெகாவாட்டாக உள்ளது. குறைந்த விலையில் மின்சாரம் கொள்முதல் செய்யவேண்டும் என்ற அடிப்படையில் யூனிட் ரூ.2.61 என்ற விலையில் 1,000 மெகாவாட் மின்சாரம் வாங்க முதல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அடுத்து 1,500 மெகாவாட் மின்சாரம் ரூ.3.26-க்கு வாங்க 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
கரூர் நகராட்சி மாநகராட்சியாகவும், பள்ளபட்டி பேரூராட்சி நகராட்சியாகவும், புஞ்சை புகழூர், காகிதஆலை பேரூராட்சி ஆகியவை இணைக்கப்பட்டு புஞ்சை புகழூர் நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்புகள் தரம் உயருவதால் நிச்சயம் வரி உயராது. அரசு கொள்கை முடிவு எடுத்து எப்போது வரிகளை உயர்த்துகிறதோ அப்போது தான் வரி உயர்வு இருக்கும் என்றார்.
மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் நடந்த மற்றொரு நிகழ்ச்சியில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பங்கேற்று விவசாயிகளுக்கு மின் இணைப்பு ஆணை, மின்வாரியத்தில் பணியில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிப் பேசும்போது, ‘‘தமிழகத்தில் புதிதாக 3 மின் மண்டலங்கள் அமைக்கப்படும். அதில் கரூரை தலைமையிடமாக கொண்டு ஒரு மின் மண்டலம் அமைக்கப்படும்’’ என்றார்.
தொடர்ந்து மின் பகிர்மான வட்ட வளர்ச்சிப்பணிகள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மின்வாரிய மேலாண்மை இயக்குநர் ராஜேஷ்லக்கானி, கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ க.சிவகாமசுந்தரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago