பேத்தமங்கலா, ராமசாகர் அணை நிரம்பியதால் - பாலாற்றில் கரைபுரண்டோடும் வெள்ளப்பெருக்கு : வேலூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை 60 சதவீதம் அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பேத்தமங்கலா, ராமசாகர் அணை முழுமையாக நிரம்பி உபரிநீர் வெளியேறிவருவதால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு கரைபுரண்டோடி வருகிறது. பாலாற்றில் வரும் நாட்களில் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக-ஆந்திர எல்லை யொட்டிய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பாலாற்றின் துணை ஆறுகளான மண்ணாறு, மலட்டாறு, கவுன்டன்யா ஆறு, அகரம் ஆறு, பொன்னை ஆறுகளில்ஒரே நேரத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல், ஆந்திர மாநிலத்தில் பாலாற்றின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் சுமார் 14 அடி உயரம் கொண்ட புல்லூர் தடுப்பணையை விட சுமார் 3 அடி உயரத்துக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் பாலாறு அணைக்கட்டு பகுதியில் நேற்று மாலை நிலவரப்படி சுமார்7,500 கன அடிக்கு தண்ணீர் வந்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, ஒருங் கிணைந்த வேலூர் மாவட்டத்தில்பாலாற்றில் இருந்து பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீரை திருப்பி விடும் பணியை நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து மேற் கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 101 ஏரிகளில் 40 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளன. 30 ஏரிகளில் 75% நிரம்பியுள்ளன. மாவட்டத்தின் பெரிய ஏரியான வேலூர் சதுப்பேரி ஏரி அடுத்த 4 நாட்களில் முழு கொள்ளளவை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 379 ஏரிகளில் 81 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 28 ஏரிகளில் 75%, 44 ஏரிகளில் 50%, 72 ஏரிகளில் 25%, 145 ஏரிகளில் 25% அளவுக்கு தண்ணீர் நிரம்பியுள்ளன.

இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பாலாற்றின் குறுக்கே கட்டியுள்ள பேத்தமங்கலா அணை கடந்த வாரம் முழு கொள்ளளவை எட்டியதுடன், அதலிருந்து வெளியேறி வரும் உபரி நீர் ராமசாகர் அணைக்கு செல்கிறது. தற்போது, ராமசாகர் அணையும் நிரம்பியுள்ளதாக தகவல் வந்துள்ளது. அங்கிருந்து ஆந்திராவை கடந்து தமிழகத்தை தொடும் 42 கி.மீ தொலைவுக்கும் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் பாலாற்றின் குறுக்கே அம்மாநில அரசு கட்டியுள்ள 24 தடுப்பணைகளும் நிரம்பியுள்ளதால் வரும் நாட்களில் பாலாற்றில் வெள்ளத்தின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் 10 நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது. தென்மேற்கு பருவமழையால் கடந்த மாதம் நிலவரப்படி வேலூர் மாவட்டத்தில் 50 சதவீத அளவுக்கு அதிகமாக மழை பெய்துள்ளது. அது தற்போதைய நிலவரப்படி 10 சதவீத அதிகரித்து 60 சதவீத ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கினால் நமக்கு இன்னும் அதிக மழை கிடைக்க வாய்ப்புள்ளது’’ என தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்