நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்ரியா சாஹூ பேசியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, தோட்டக்கலைத் துறை, வனத்துறை, மின்சார வாரியம், காவல் துறை, தீயணைப்புத் துறை, நெடுஞ்சாலைத் துறை உட்பட பல்வேறு துறைகள் இணைந்து பணியாற்றும் வகையில் 42 மண்டல குழுக்களாக பிரிந்து 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் 6 வட்டங்களுக்கு உட்பட்ட இடங்களில் மழைக் காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களாக கண்டறியப்பட்ட 283 பகுதிகள், ‘TNSMART’ செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகள் மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை தங்க வைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 456 முகாம்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். முகாம்களில் தேவையான உணவுப் பொருட்கள், குடிநீர் வசதி, கழிப்பிடம் மற்றும் மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
சாலைகளில் மரங்கள் விழவும் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் இயந்திரம், மணல் மூட்டைகளை தயாராக வைத்திருக்க வேண்டும். நெடுஞ்சாலைகளில் உள்ள கால்வாய்கள் மற்றும் பாலங்களில் உள்ள அடைப்புகளை போர்க்கால அடிப்படையில் சுத்தம் செய்யவேண்டும். சுகாதாரத் துறை சார்பில் ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவக் குழுவினர், மருந்து இருப்பு போன்றவை தயார் நிலையில் இருக்க வேண்டும்.
மாவட்ட அவசர கால மையத்தில், சுழற்சி முறையில் பணியாளர்களை நியமித்து பொதுமக்கள் 24 மணி நேரமும் 1077 என்ற அவசர கால உதவி எண்ணை தொடர்பு கொள்ளும் வகையில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா உட்பட பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago