நாமகிரிப்பேட்டை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டையில் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு ஆய்வு மேற்கொண்ட நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங், உள்நோயாளிகள், புறநோயாளிகளுக்கு அளிக்கப் படும் சிகிச்சைகள் குறித்தும், சிறுநோய்களுக்கான சிகிச்சைகள், பேறுகால சிகிச்சைகள், ஆய்வக வசதிகள் மற்றும் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை கள், சர்க்கரை நோய் சிகிச்சை மற்றும் கண்பரிசோதனை சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், ஆண், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம், புறநோயாளிகளின் வருகை, குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட தாய்மார்களின் விவரம் குறித்தும் ஆட்சியர் கேட்டறிந்தார். நோயாளிகளுக்கான படுக்கை வசதி, மருத்துவர் அறை, கர்ப்பிணித்தாய்மார்களுக்கான பரிசோதனை அறை, ரத்த பரிசோதனை அறை, முதலுதவி மற்றும் ஊசி போடும் அறை, மருந்து வழங்கும் அறை உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.
சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணிகளிடம் மருத்துவரின் ஆலோசனைகளை பின்பற்றி, ஆரோக்கியமான உணவுகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார். தாய்மார்களிடம் பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் ஆட்சியர் ஸ்ரேயா சிங் எடுத்துரைத்தார்.
ஆய்வின் போது சுகாதாரத்துறை துணை இயக்குநர் பிரபாகரன், வட்டார மருத்துவ அலுவலர் தயாசங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago