நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தலைவரை வாக்காளர்களே நேரடியாக தேர்வு செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
புதுக்கோட்டையில் நேற்று முன்தினம் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி அமைந்துள்ளது.
அடுத்து நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மறைமுக தேர்தல் வாயிலாக தலைவர்களைத் தேர்வு செய்தால் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே, வாக்காளர்களே தலைவர்களை நேரடியாக தேர்வு செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.
உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் உயிரிழப்புக்கு மத்திய உள்துறை இணை அமைச்சரின் மகன் காரணம் என்பதால், இதற்கு தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். இச்சம்பவத்துக்கு பிரதமர் வருத்தம்கூட தெரிவிக்காமல் இருப்பது அவரின் சர்வாதிகார போக்கைக் காட்டுகிறது. இதே நிலை நீடித்தால் நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில்தான் முடியும்.
அரசியல் என்பது தொழில் அல்ல. அது சேவை செய்யக்கூடிய இடம். எனவே, அரசியலுக்கு நடிகர் விஜய், அவரது மகன், சசிகலா என யார் வேண்டுமானாலும் வரலாம் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago