புவிசார் குறியீடு பெற்ற பின்னரும் - கோவில்பட்டி கடலைமிட்டாய் என்ற பெயரில் பிற ஊர்களில் தயாரிப்பு :

கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார்குறியீடு பெற்ற பின்னரும், பிற ஊர்களில்இதே பெயரில் கடலை மிட்டாய் தயாரித்து விற்பனைக்கு வருவதால், உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சுத்த கரிசல் மண்ணில் விளைவிக்கப்படும் நிலக்கடலைகளுக்கு தனி மவுசு உண்டு. இயற்கையாகவே இனிப்புச் சுவையுடன் உள்ள இந்தநிலக்கடலைகளை கொண்டு தயாரிக்கப்படும் கடலைமிட்டாய்கள் உலக பிரசித்தி பெற்றதாகும்.

கோவில்பட்டியில் 1940-ம் ஆண்டு முதல் கடலை மிட்டாய் உற்பத்தி செய்யப்படுவதற்கான ஆவணங்கள் உள்ளன. தாமிரபரணி தண்ணீர், கோவில்பட்டி மண்ணின் தன்மை, கரிசல் மண்ணில் விளையும் நிலக்கடலை, பனைவெல்லம் ஆகியவற்றுடன் விறகு அடுப்பை பயன்படுத்தி தயாரிப்பதுதான் கடலைமிட்டாயின் சிறப்பு. கடலைமிட்டாயில் புரதம், வைட்டமின், தாதுச்சத்து, ஊட்டச்சத்து உள்ளிட்ட அனைத்துவகை ஆற்றல் கொண்ட உணவாக உள்ளது. மருத்துவ குணங்களும் அதிகம் உள்ளன. மேலும், கடலைமிட்டாய் பாகு தயாரிப்பதற்காக பதம் பார்ப்பது, எவ்வளவு மணி நேரத்தில் தயாரிப்பது, கடலைமிட்டாய் ரகம் வாரியாக வெட்டுவது என இதனை உற்பத்தி செய்வதற்கான திறமை அனைத்தும் கோவில்பட்டியில் உள்ள தொழிலாளர்களுக்கே உரிய தனிச்சிறப்பாகும்.

சிறப்பு வாய்ந்த கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு கடந்த ஆண்டு மத்தியஅரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறையின் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. அதன் பின்னரும் வேறு ஊர்களில் கோவில்பட்டி கடலைமிட்டாய் என தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் கோவில்பட்டியை சேர்ந்த உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, கோவில்பட்டி கடலைமிட்டாய் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் நலச்சங்க செயலாளர் கே.கண்ணன் கூறும்போது, ``கோவில்பட்டியில் 150 கடலைமிட்டாய் கடைகள் உள்ளன. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒரு கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கரோனா காலத்திலும் கூட, ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பை கடலைமிட்டாய் தொழில் வழங்கியது.

`கோவில்பட்டி கடலைமிட்டாய்’ என்ற பெயரில் புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளதால், இதே பெயரில், வெளியூர்களில் கடலைமிட்டாய் தயாரிக்க முடியாது. ஆனால், பிற ஊர்களில் `ஒரிஜினல் கோவில்பட்டி கடலைமிட்டாய்’ என அச்சிட்டு விற்பனை செய்கின்றனர். அதில் உள்ள தயாரிப்பாளர் பெயரை பார்த்தால் சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவரின் பெயர் உள்ளது. அவர்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றுகின்றனர்.

வெளியூர்களில் இருந்து கோவில்பட்டிக்கு வந்து புதிதாக கடலைமிட்டாய் உற்பத்தி செய்பவர் கூட, கோவில்பட்டி கடலைமிட்டாய் என அச்சிடமுடியாது. ஏனென்றால், தொடர்ந்து 5 ஆண்டுகள் அவர் கோவில்பட்டியில் வசித்திருக்கவேண்டும். இதனை மீறி செயல்படுபவர்கள் மீது வழக்கு தொடர முடியும்.

அரசு தலையிட்டு இதுபோன்ற புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை போலியாக மற்ற ஊர்களில் தயார் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் புவிசார் குறியீடு பெற்ற பாரம்பரிய உணவுப் பொருட்களின் தரம் குறையாமல் மக்களை சென்றடையும்” என்றார்.

இதுகுறித்து, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு பெற்றுத்தர உதவியவருமான ப.சஞ்சய்காந்தி கூறும்போது, ``புவிசார் குறியீடு பெற்ற பின்னரும் கோவில்பட்டி கடலைமிட்டாய் என்ற பெயரில் பிற ஊர்களில் தயாரிப்பது தொடர்பாக உற்பத்தியாளர்கள் என்னை அணுகினர். பிற ஊர்களில் விற்பனை செய்பவர்களை பற்றி முழு விவரங்களைத் திரட்டி வருகிறோம். அவர்கள் மீது சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்