திருப்பத்தூர் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பெயிண்ட் கடை உரிமையாளர் உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(45). இவர், காக்கங்கரை பகுதியில் வாகனங்களுக்கு பெயிண்ட் மற்றும் பாலிஷ் செய்யும் கடை நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்று பிற்பகல் கடையில் இருந்து தனது வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் கிருஷ்ணமூர்த்தி சென்றார்.
காக்கங்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்ற போது தருமபுரியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் அதிக வேகத்துடன் வந்த சஞ்சய் (21) என்பவர் கிருஷ்ணமூர்த்தி வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில், கிருஷ்ணமூர்த்தி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். சஞ்சய் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
உடனே, அங்கிருந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கிருஷ்ணமூர்த்தி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கந்திலி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago