நீலகிரி மாவட்டத்தில் அனுபோகசான்றுக்கு விண்ணப்பிக்கும் முறை, இ-சேவை மையங்களில் நிறுத்தப்பட்டதால், சான்று பெற முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் 6 தாலுகாக்களில், 77 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. தேயிலை, மலைக் காய்கறி களை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயனடையும் வகையில், பயிர்க்கடனுக்கு மாநில அரசு நிதி வழங்கி வருகிறது. அதன்படி, தேயிலைத் தோட்டம் வைத்துள்ள விவசாயிகள், அதற்கான கணினி சிட்டா எடுத்து, அனுபோக சான்றை வருவாய்த் துறை மூலம் பெற்று,வங்கிகளுக்கு கொடுத்து கடன்பெற வேண்டும். விவசாயிகள் நலன் கருதி, கடந்த செப்.23-ம் தேதிமுதல் அனுபோக சான்றுக்கு இணைய வழியில் விண்ணப் பிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. பெரும்பாலான விவசாயிகள் குறைந்த கட்டணத்தில், சான்றுபெற இ-சேவை மையம் மூலம்விண்ணப்பித்து வந்தனர். நேற்றுமுதல் இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கும் முறை நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது இதனால் விவசாயிகள் ஏமாற்றத் துடன் திரும்பினர்.
இதுகுறித்து வட்டாட்சியர் லோகநாதனிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்திலேயே முதல்முறையாக அனுபோக சான்றுபெற இணைய வழியில் விண்ணப்பிக்கும் முறையை, நீலகிரி மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது. கட்டணம் செலுத்தியதற்கான கணினி ரசீது வழங்கும் வசதி இல்லாத காரணத்தால், இ-சேவை மையத்தில் இச்சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago