கிருஷ்ணகிரி மாவட்டத்தில் - சிறப்பாக பணியாற்றிய 93 காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் :

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்டத்தில் பல்வேறு வழக்கு மற்றும் காவல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினரை பாராட்டி, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி தலைமை வகித்து பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

கிருஷ்ணகிரி டவுன், சூளகிரி மற்றும் கெலமங்கலம் ஆகிய காவல் நிலையங்களை தூய்மையாக வைத்தமைக்காக 40 காவலர்களுக்கும், இதேபோல், குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்தது, குட்கா பொருட்கள் கடத்தியவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை மற்றும் 10 வழக்குகளில் நீதிமன்றம் மூலம் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த 10 நீதிமன்ற காவலர்கள் உட்பட 93 பேருக்கு பாராட்டு சான்றிதழை எஸ்பி வழங்கினார்.

அப்போது எஸ்பி கூறும்போது, கிருஷ்ணகிரி, ஓசூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரேதமாக லாட்டரி, மதுவிற்பனை உள்ளிட்டவை குறித்து புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்நிகழ்வின் போது, ஏடிஎஸ்பிக்கள் விவேகானந்தன், ராஜூ, ஓசூர் ஏஎஸ்பி அரவிந்த், டிஎஸ்பிக்கள் கிருத்திகா, அலெக்ஸ்சாண்டர், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சசிகலா, இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர், மனோகரன், கபிலன், தனிப்பிரிவு எஸ்ஐ.க்கள் கண்ணன், சந்துரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE