தேர்தல் முடிவை மாற்றிக் கூறிய உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் - தோற்றவரை வெற்றிபெற்றதாக அறிவித்ததால் கிராம மக்கள் சாலை மறியல் :

By செய்திப்பிரிவு

கிளியூர் ஊராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவரை தவிர்த்துவிட்டு மற்றொரு வேட்பாளரை வெற்றிபெற்றதாக அறிவித்த வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் உளுந்தூர்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட வாக்குகள் எண்ணும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கிளியூர் ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அலமேலு என்பவர்1,300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில்,கொளஞ்சி என்ற பெண் வெற்றிபெற்றவராக அறிவித்துள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனுவாசன். இதையடுத்து கொளஞ்சி கிளியூர் கிராமத்திற்குச் சென்று நன்றி கூற, இதையறிந்து அதிர்ச்சியடைந்த அலமேலு, மீண்டும் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்றபோது, அவரை சந்திக்க சீனுவாசன் மறுத்துள்ளார்.

இதையடுத்து நேற்று காலை கிராம மக்களுடன் உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம் வந்த அலமேலு கண்ணீர் மல்க சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு உறுதுணையாக கிராம மக்களும் சுமார் 2 மணி நேரம் போராட, இதையடுத்து போலீஸார் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்ய முயற்சித்தும் அவர்கள் சமரசம் அடையவில்லை. இதையடுத்து, தூக்க கலக்கத்தில் தவறுதலாக வாக்கு எண்ணிக்கையை படித்துவிட்டதால், தவறு நேர்ந்துவிட்டதாகவும், அலமேலு வெற்றிபெற்றதாக அறிவிப்பதாகக் கூறி, அறிவிப்புச் செய்து வெற்றிபெற்றதற்கான சான்றிதழை வழங்கியுள்ளார் சீனுவாசன். இந்தத் தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் பி.என்.தர், வட்டார வளர்ச்சி அலுவலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து விளக்கம் பெற உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சீனுவாசனை தொடர்புகொண்ட போது அவர் பேச முன்வரவில்லை.

இதேபோன்று சங்கராபுரத்தில் வடகீரனூர் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் 381 வாக்குகள் பெற்ற பஷீர் என்பவர் வெற்றிபெற்ற நிலையில், 378 வாக்குகள் பெற்ற இதயத்துல்லா என்பவரை வெற்றிபெற்றதாக அறிவித்துள்ளார் தேர்தல் நடத்தும் அலுவலர். இதனால் பஷீரின் ஆதரவாளர்கள் சங்கராபும் வட்டரா வளர்ச்சி அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்வராயன்மலையில் வஞ்சிக்குழி ஊராட்சிமன்றத் தலைவருக்கு போட்டியிட்ட மகேஸ்வரி 27 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக கூறப்படும் நிலையில், சின்னக்கண்ணு என்பவரை வெற்றிபெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துள்ளார். இதை எதிர்த்து மகேஸ்வரி நேற்று கள்ளக்குறிச்சி ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளார்.

நடந்த முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் தேர்தல் நடத்தும் அலுவலராக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் தேர்தல் முடிவு அறிவிக்கும் அதிகாரம் தங்கள் வசம் இருந்ததை ஆயுதமாக பயன்படுத்தி பல்வேறு இடங்களில் முடிவுகளை மாற்றி அறிவித்ததாகவும், இதற்காக சம்பந்தப்பட்ட வேட்பாளரிடம் பேசிகமிஷன் பெற ஒருசில ஊடக ஊழியர்களை பயன்படுத்தியிருப்பதும் மாவட்ட காவல்துறைக்கு தெரிய வந்துள்ளது.

எனவே இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுகவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்