சிவகங்கை அருகே 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பெரியாறு பாசன நீர் திறக்கப்பட்டதையொட்டி 3 கி.மீ. கால் வாயை தாமாகவே முன்வந்து கிராம மக்கள் சுத்தம் செய்தனர்.
பெரியாறு பாசன நீர் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 6,748 ஏக்கர் பயன் பெறுகின்றன. இதற்காக 5 பெரியாறு கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஷீல்டு கால்வாய் மூலம் 40 கண் மாய்களுக்குத் தண்ணீர் வருகிறது. இதன் மூலம் கள்ளராதினிப்பட்டி, திருமலை, மேலப்பூங்குடி, சாலூர், திருமன்பட்டி, சோழபுரம் உட்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1,748.25 ஏக்கர் பாசன வசதி பெறு கின்றன. ஷீல்டு கால்வாய் மதுரை மாவட்டம், மேலூர் குறிச்சிப்பட்டி கண்மாயில் தொடங்கி சோழபுரம் எட்டிச்சேரி கண்மாய் வரை 7 கி.மீ. செல்கிறது. கடைமடை பகுதியான சோழபுரம் எட்டுச்சேரி கண்மாய் மூலம் 2 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. ஆனால் இக்கண்மாய்க்கு கடந்த 10 ஆண்டுகளாக பெரியாறு நீர் திறக்கப் படவில்லை.
இப்பகுதி மக்கள் உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தியும் தீர்வு இல்லாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது இக்கண்மாய்க்கு பெரியாறு நீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று இக்கண் மாய்க்கு தண்ணீர் வர உள்ள நிலையில் நேற்று 3 கி.மீ-க்கு புதர் மண்டியிருந்த பெரியாறு பாசன கால்வாயை சோழபுரம் கிராம மக்களே தாமாக முன்வந்து சுத்தம் செய்தனர்.
10 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் திறக்கப்படுவதற்கு கிராம மக்கள் அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் நன்றி தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago