கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய சந்தையான தோவாளை மலர் சந்தையில்கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில்பூக்கள் விற்பனை மந்தமாகவே இருந்தது. ஓணம் பண்டிகையின்போது விற்பனை சிறப்பாக இருந்ததால் மலர் விவசாயிகள், வியாபாரிகள் ஓரளவு வாழ்வாதாரம் பெற்றனர். ஆனால், அதன் பின்னர் மீண்டும் பூக்கள் விற்பனையில் தேக்கம் நிலவியது.
இந்நிலையில், நவராத்திரி பூஜைகளுக்காக கடந்த ஒரு வாரமாக தோவாளை மலர் சந்தையில் ஓரளவு பூக்கள் விற்பனை ஆனது. இன்று ஆயுதபூஜையை முன்னிட்டு மதுரை, சத்தியமங்கலம், பெங்களூரு, சேலம் பகுதிகளில் இருந்து வழக்கத்தைவிட 100 டன்களுக்கு மேல் பூக்களை மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டத்துக்கு தடை இருந்தாலும், வீடுகளில் பூஜை செய்வதற்காக மக்கள் நேற்று அதிகாலையில் இருந்தே பூக்களை வாங்க குவிந்தனர். இதனால் நேற்று தோவாளை மலர் சந்தை களைகட்டியது. ஒரு கிலோ மல்லிகை ரூ.850-க்கும், பிச்சிப்பூ 1,250-க்கும் விற்பனை ஆனது. கிரேந்தி ரூ.100, வாடாமல்லி ரூ.180-க்கு விற்பனை ஆனது. சரஸ்வதி பூஜைக்கு உகந்த தாமரை பூ ஒன்று ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை ஆனது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருநெல்வேலி
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்கள், பூக்கள், காய்கறிகள் வாங்க திருநெல்வேலியில் டவுன்மார்க்கெட், பாளையங்கோட்டையில் தற்காலிக மார்க்கெட், தச்சநல்லூர் மார்க்கெட்டுகளில் நேற்று கூட்டம் அதிகமிருந்தது. இப்பகுதிகளில்போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது. பூஜைக்கான பூக்களின் தேவை அதிகரித்ததாலும், கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையால் பூக்கள் உற்பத்தி குறைந்திருந்ததாலும் அவற்றின் விலை நேற்று உயர்ந்திருந்தது. அதன்படி நேற்று முன்தினம் ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை நேற்று காலையில் ரூ.1,000-க்கு விற்கப்பட்டது. கேந்திரூ.100-ல் இருந்து ரூ.150 ஆகவும், வெள்ளை செவ்வந்தி ரூ.100-ல் இருந்து ரூ.200 ஆகவும், பிச்சி ரூ.600-ல் இருந்து ரூ.1,000ஆகவும், ரோஜா ரூ.150-ல் இருந்து ரூ.250 ஆகவும், சம்பங்கி ரூ.200-ல் இருந்து ரூ.300 ஆகவும் உயர்ந்திருந்தது.
தூத்துக்குடி
நவராத்திரி விழாவின் கடைசி நாள் ஆயுதபூஜையாக கொண்டாடப்படுகிறது. அன்று வீடுகளிலும், கோயில்களிலும், தொழில் நிறுவனங்களிலும் பூஜைகள் நடத்தப்படும். இதையொட்டி பூஜை பொருட்களை வாங்குவதற்காக மக்கள் நேற்று சந்தைகளில் குவிந்தனர். தூத்துக்குடி மலர்ச்சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பூக்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது. மல்லிகைப்பூ, பிச்சிப்பூ ஒரு கிலோ தலா ரூ.800, கலர் பிச்சி - ரூ.200, கனகாம்பரம் - ரூ.1,000, செண்டுப்பூ - ரூ.100, பட்டர் ரோஸ் - ரூ.200, கோழிப்பூ - ரூ.40, துளசி - ரூ.20 என விற்பனை செய்யப்பட்டது.மேலும், தூத்துக்குடி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான வாழைக்கன்றுகள் விற்பனைக்காக மார்க்கெட் பகுதியில் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. ஒரு ஜோடி வாழைக்கன்று ரூ.10 முதல் விற்பனை செய்யப்பட்டன. அதேபோல், சிறிய பாக்கெட்டுகளாக அவல், சோளப்பொரி, அரிசிப்பொரி ஆகியவை தலா ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. மாவிலை, பனைஓலை தோரணங்களும் விற்பனை செய்யப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago