தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தொடர் மழையின் காரணமாக வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதை அடுத்து, ஆட்சியர் நேற்று அங்கு சென்று ஆய்வு செய்து, சீரமைப்பு பணிகளை முடுக்கி விட்டார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.
இந்த மழை காரணமாக ஒரத்தநாடு அருகே சேதுராயன்குடிக்காடு கிராமத் தில் அக்னியாறு வடிநிலகோட்டத்துக்கு உட்பட்ட வேதபுரி வாய்க்காலில் மழைநீர் அதிகமாக சென்றதால், வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், 35 ஏக்கர் விளைநிலங்கள் நீரால் சூழப்பட்டுள்ளன. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பகுதி விவசாயிகளிடம் வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.
மேலும், உடனடியாக பொதுப்பணித் துறையினர் மூலம் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் தடுப்பு கட்டைகள் அமைத்து, மணல் மூட்டைகளை அடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார். அப்போது, ஆழி வாய்க்கால் மற்றும் தென்னமநாடு சந்திப்பு பகுதியில் நஞ்சுகொண்டான் வாய்க்காலில் சேதமடைந்துள்ள சிறுபாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத் தனர். இதையடுத்து, அப்பகுதியை பார்வையிட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, பொதுப்பணித் துறை பொறியாளர்கள் கனிமொழி, திலீபன், அருண் கணேஷ், ஆனந்தராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago