கந்து வட்டி கேட்டு மிரட்டியதால் தற்கொலை - தட்டப்பாறையில் மேலும் ஒருவர் கைது :

By செய்திப்பிரிவு

தட்டப்பாறை பகுதியில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதால் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், மேலும் ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டார்.

தட்டப்பாறை அருகே திம்மராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரம்மராஜன் (55). இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வைகுண்டம் பகுதியைச் சேர்ந்த பிச்சாண்டி மகன் சிவசிதம்பரம் என்பவரிடம் கந்துவட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். சிவசிதம்பரத்திடம் வாங்கிய கடனை திரும்பச்செலுத்துவற்காக, பேரூர் அருணாசலம் (45), பத்மநாபமங்கலம் லட்சுமணன் மகன் பார்த்திபன் (31) ஆகியோரிடம் அதிக வட்டிக்கு கடன் பெற்று, சிவசிதம்பரத்தின் கடனை திரும்பச் செலுத்த பிரம்மராஜன் வந்துள்ளார். ஆனால், கூடுதல் பணம் கேட்டு அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

பார்த்திபன், அருணாசலம் ஆகியோரும் தாங்கள் கொடுத்த கடனை திருப்பித் தருமாறு பிரம்மராஜனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

கடந்த மாதம் 13-ம் தேதி இரவு பிரம்மராஜனின் வீட்டுக்கு வந்த இருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மனமுடைந்த பிரம்மராஜன் வர்த்தகரெட்டிபட்டி பகுதியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

தட்டப்பாறை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அருணாச்சலத்தை கடந்த மாதம் 14-ம் தேதி தனிப்படை போலீஸார் கைது செய்தனர். இவர் கடந்த 11-ம் தேதி குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். பார்த்திபனை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை தேடி வருகின்றனர்.

`கந்து வட்டி வசூலிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள்’ என,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்