செங்கம் அருகே கொலை வழக்கில் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை : எஸ்.சி., எஸ்.டி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

செங்கம் அருகே பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட எஸ்.சி., எஸ்.டி சிறப்பு அமர்வு நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் உத்தரவிட்டார்.

திருவண்ணாலை மாவட்டம் செங்கம் வட்டம் தாமரைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆலடியான் (70). இவர் தனது மூத்த மகன் ஏழுமலை (56) என்பவருடன் பெங்களூருவில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். ஊரில் இருந்த இவர்களுக்குச் சொந்தமான பஞ்சமி நிலத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி தரப்பினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அந்த நிலத்தை மீட்க தனது மூத்த மகனுடன் ஆலடியான் கடந்த ஆண்டு தாமரைப்பாக்கம் கிராமத்துக்கு வந்துள்ளார்.

இதற்கிடையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16-ம் தேதி இரவு மூத்த மகன் ஏழுமலை திடீரென காணாமல் போனார். இதனால் திடுக்கிட்ட ஆலடியான் எங்கு தேடியும் மகன் ஏழுமலை கிடைக்கவில்லை. மறுநாள் (17-ம் தேதி) காலை மாதிமங்கலம் செல்லும் பைபாஸ் சாலையில் காளியம்மன் கோயில் அருகே உடலில் காயங்களுடன் புதர்களுக்கு நடுவில் உயிரிழந்த ஏழுமலையின் உடலை ஆலடியான் பார்த்துள்ளார்.

இது தொடர்பான புகாரின்பேரில் கடலாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சந்தேக மரணத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். ஏழுமலையின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து கொலை மற்றும் எஸ்.சி.,எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவின் கீழ் வழக்கு மாற்றப்பட்டு போளூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் விசாரணை நடத்தினார்.

அதில், ஏழுமலை கொலை தொடர்பாக ஆலடியானின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த ராமமூர்த்தியின் மகன் கோட்டீஸ்வரன் (30) மற்றும் உறவினர் கிருஷ்ணமூர்த்தி (50) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கின் விசாரணை திருவண் ணாமலை மாவட்ட எஸ்.சி., எஸ்.டி சிறப்பு அமர்வு நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் முன்னிலையில் நடந்து வந்தது. முடிவில், கொலைக் குற்றம் சாட்டப்பட்ட கோட்டீஸ்வரன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையுடன் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் சாட்சியங்களை மறைத்த குற்றத்துக்காக இருவருக்கும் 7 ஆண்டுகள் தண்டனையும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.

எஸ்.பி., பாராட்டு

இந்த வழக்கில் சிறப்பாக விசாரணையை நடத்தியதுடன் ஓராண்டில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்ததற்காக போளூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன், நீதிமன்ற காவலர் தமிழரசன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் பாராட்டியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்