காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 86 பேரும், 98 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு 535 பேரும், 232 ஊராட்சி தலைவர் பதவிக்கு 1395 பேரும், இந்த ஊராட்சிகளில் உள்ள சிற்றூராட்சி உறுப்பினர் பதவிக்கு 6587 பேரும் போட்டியிட்டனர்.
இவர்களில் போட்டியில்லாமல் தேர்வு செய்யப்பட்டவர்கள் தவிர மற்றவர்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இவர்களுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது.
இந்த வாக்கு எண்ணிக்கையில் மாலை 7 மணி நிலவரப்படி 11 மாவட்ட ஊராட்சிகளில் 6-ல் திமுக கூட்டணி முன்னிலையில் இருந்தது. 98 ஒன்றியக் குழு உறுப்பினர்களில் 33 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் இருந்தது. 6 இடங்களில் அதிமுக கூட்டணி முன்னணியில் இருந்தது. திமுக 10 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாமக 2 இடங்களில் வெற்றி பெற்றது. ஊராட்சி தலைவர் பதவிகளிலும் திமுக ஆதரவாளர்களே அதிகம் வெற்றி பெற்றனர்.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 16 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிகளில் 9 இடங்களில் முன்னணி நிலவரங்கள் தெரிய வந்தன. இதில் 7 இடங்களில் திமுக கூட்டணியும், 2 இடங்களில் அதிமுக கூட்டணியும் முன்னிலை வகித்தன.
ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிகளில் 21 இடங்களில் திமுக கூட்டணியும், 9 இடங்களில் அதிமுக கூட்டணியும் முன்னிலை வகித்தன.
திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த இருவரும், அதிமுகவைச் சேர்ந்த ஒருவரும் வெற்றி பெற்றனர்.
திருப்போரூர் ஒன்றியத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்றார். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை நள்ளிரவுவரை நீடித்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago