தூத்துக்குடி வஉசி துறைமுகம் சார்பில் - 100 ஏக்கரில் பல்நோக்கு சரக்கு போக்குவரத்து பூங்கா : துறைமுக பொறுப்புக் கழக தலைவர் தகவல்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி வஉசி துறைமுக பொறுப்புக் கழக தலைவர் தா.கி.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி வஉசி துறைமுகம் 14.20 மீட்டர் மிதவை ஆழத்துடன் பெரிய வகை கப்பல்களையும் கையாளும் வகையில் செயல்பட்டு வருகிறது. இத் துறைமுகம் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து வசதியை கொண்டுள்ளது. இந்த துறைமுகம் 2048-2049-ம் ஆண்டில் சுமார் 125.68 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் எனவும், 2048- 2049-ம் ஆண்டில் சரக்கு பெட்டக வர்த்தகமானது சுமார் 4.3 மில்லியன் டன் அளவில் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தூத்துக்குடி துறைமுகத்துக்கு கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு,பொள்ளாச்சி, கரூர், ராஜபாளையம் மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து அதிகளவில் வர்த்தகம் நடைபெறுகின்றன.

இதனைக் கருத்தில் கொண்டு தூத்துக்குடி வஉசி துறைமுகம் சார்பில் பல்நோக்கு சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் சரக்கு பெட்டகம் மற்றும் மொத்தசரக்குகளை சுலபமாக கையாளும்வகையில் சரக்கு பரிமாற்றத்துக்கான வசதிகள் ஏற்படுத்தப்படும். குளிர்சாதன சேமிப்பு கிடங்கு,சிறப்பு வசதிகளுடன் கூடிய சேமிப்புகிடங்குகள் அமைக்கப்படும்.

மேலும், பல்வேறு இயந்திரவசதிகளுடன் கூடிய சேமிப்பு கிடங்குகளில் சரக்குகளை சுலபமாக ஒரு போக்குவரத்தில் இருந்து மற்றொரு போக்குவரத்துக்கு மாற்றும் வசதி ஏற்படுத்தப்படும். சுங்கத்துறை அனுமதி மையம், சுங்கத்துறை அனுமதி பெற்ற சேமிப்பு கிடங்குகள், பரிசோதனை வசதிகள், உற்பத்திக்கு பின் நடைபெறும் வகைப்படுத்துதல், பேக்கிங் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்படும்.

இந்த பல்நோக்கு சரக்கு போக்குவரத்து பூங்கா கோவை, மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய3 முக்கிய நகரங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் 100 ஏக்கர் நிலம்தேர்வு செய்யப்பட்டு அங்கு அமைக்கப்படும். இந்த பூங்கா அமைப்பதற்காக வஉசி துறைமுகம் சார்பில் தொழிற்சாலை மற்றும் வர்த்தக அமைப்புகளுடனும், துறைமுக பயனாளிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

இதன் அடிப்படையில் தகுதியான சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். இந்த பூங்கா அமைப்பதன் மூலமாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் சரக்குபோக்குவரத்து கட்டணங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளின்கட்டணங்கள் குறைக்கப்படுவதுடன், அதிகளவு சரக்கு போக்குவரத்து வாகனங்களினால் ஏற்படும் இயற்கை மாசுபடுதலும் குறைக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்