இரும்பாலைக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக் கோரி - திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 5 கிராம மக்கள் :

By செய்திப்பிரிவு

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் சு.வினீத் தலைமையில் நேற்று நடந்தது. அப்போது தாராபுரம் வட்டம் கொழுமங்குளி, சங்கரண்டாம்பாளையம், வடுகபாளையம், சிறுகிணறு, கண்ணாங்கோவில் ஆகிய 5 கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அளித்த மனுவில் ‘தாராபுரத்தில் வடுகபாளையம் கிராமத்தில் இரும்பாலை அமைக்கும் நோக்கில், தனியார் நிறுவனம் நிலங்களை விலைக்கு வாங்கியுள்ளது. பொதுமக்களிடம் கருத்து கேட்காமல், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் உண்மைகளை மறைத்து, முறைகேடாக அனுமதி பெற்றுள்ளனர். இரும்பாலை அமைந்தால் அதிலிருந்து வெளியேறும் நச்சுப்புகை மற்றும் இரும்புத் துகள்களால் எங்கள் பகுதிகளில் விவசாயம் பாதிக்கும். முறைகேடாக இரும்பாலைக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும்,’ என தெரிவித்துள்ளனர்.

காங்கயம் பகுதி கிராம மக்கள் அளித்த மனுவில், ‘நத்தக்காடையூர், பரஞ்சேர்வழி, மருதுறை, பழையகோட்டை, பொன்பரப்பி ஆகிய கிராமங்களில் பாதுகாப்பற்ற முறையில் இயங்கி வரும் தேங்காய் நார் கழிவு தொழிற்சாலைகளை, உள்ளாட்சி நிறுவன சட்டம் மற்றும் பொது சுகாதார சட்டம் 1939-ன் கீழ் உடனடியாக சீல் வைத்து நிரந்தரமாக மூட வேண்டும். எங்கள் பகுதிகளில் இயங்கி வரும் 15-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளால், நிலத்தடி நீர்மட்டம் மாசுபட்டுள்ளது,’ என குறிப்பிட்டுள்ளனர்.

உடுமலை வட்டம் செல்லப்பம்பாளையம் கிராம மக்கள் அளித்த மனுவில் ‘வரவு, செலவு காட்டப்படாததால் கடந்த 2-ம் தேதி நடந்த கிராம சபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஊராட்சிப் பணியில் நிதிமுறைகேடுகள் நடந்துள்ளன. ஆகவே ஒத்திவைக்கப்பட்ட கிராம சபை கூட்டத்தை ஆட்சியர் தலைமை வகித்து நடத்தித்தர வேண்டும்,’ என குறிப்பிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்