நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை முதல் பெய்த கன மழையின்போது, உதகை அரசு மருத்துவமனையில் மின்னல் தாக்கி சுற்றுச்சுவர் சேதமானது. பர்லியாறில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் நீலகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. பர்லியாறு பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்தது. இதனால், சுமார் ஒரு மணி நேரம் மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் போக்குவரத்து தடைபட்டது. தீயணைப்புத்துறையினர் வந்து மரத்தை வெட்டி அகற்றிய பின்னர் போக்குவரத்து சீரானது.
இந்நிலையில், உதகையில் பெய்த கன மழை காரணமாக தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. சேரிங்கிராஸ் பகுதியில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர். வெள்ளத்தில் பல வாகனங்கள் சிக்கிக் கொண்டன.
உதகை அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் மீது மின்னல் தாக்கியதில் சுவர் சேதமானது. சுவரின் இடிபாடுகளும், மரங்களும் சாலையில் விழுந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக இயந்திரங்கள் மூலம் இடிபாடுகள் அகற்றப்பட்ட பின்னர் போக்குவரத்து சீரானது.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று மாலை வரையில் அதிகபட்சமாக உதகையில் 40.5 மி.மீ., மழை பதிவானது. தேவாலாவில் 33, குந்தாவில் 21, குன்னூரில் 20, கீழ் கோத்தகிரியில் 18, கோடநாட்டில் 15, கெத்தையில் 13, பந்தலூரில் 12, அவலாஞ்சியில் 11, கோத்தகிரியில் 9, பர்லியாறில் 8, கல்லட்டியில் 7, கேத்தியில் 5 மி.மீட்டரும் மழை பதிவானது.
மலை ரயில் சேவை ரத்து
இந்நிலையில் கடந்த 10-ம் தேதி கல்லாறு-அடர்லி இடையே ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதாலும், பாறைகள் உருண்டு விழுந்ததாலும் மேட்டுப்பாளையம்-உதகை இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. ரயில் பாதையில் விழுந்துள்ள பாறைகளை அகற்றும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சீரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடையாததால் நேற்றும் (அக்.11), இன்றும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாகவும், குன்னூர்-உதகை இடையே வழக்கம்போல ரயில் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago