குறிஞ்சிப்பாடி அருகே 54 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம் பெருமச்சேரி கிராமத்தை சேர்ந்த குழந்தைவேல் மகன்கள் முருகேஷ், வடிவேல். இவர்கள் இருவரும் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெத்தநாயக்கன்குப்பம் கிராமத்தில் தங்கி 800-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை மேய்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பெரிய ஏரி அருகே மேய்ந்து கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் மயங்கி விழுந்தன.

இதில் 54 ஆடுகள் உயிரிழந்தன. இது குறித்து தகவலறிந்த குறிஞ்சிப்பாடி கால்நடை மருத்துவர்கள் ராஜா, வித்யாசங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மயங்கிக் கிடந்த ஆடுகளுக்கு சிகிச்சையளித்தனர். அதில் 60-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிர்பிழைத்தன.

கடலூர் மாவட்ட கால்நடை மண்டல இணை இயக்குநர் குபேந்திரன், கால்நடை நோய் புலனாய்வு துறை மருத்துவர்கள் ராஜேஷ்குமார்,சுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த ஆடுகளை ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.

ஆடுகள் மரவள்ளி இலை சாப்பிட்டு இறந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணத்தால் இறந்ததா என ஆய்வு அறிக்கை வந்தவுடன் தெரியவரும் என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த ஆடுகளின் மதிப்பு ரூ. 3.50 லட்சம் ஆகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்