டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை அவசியம் : சித்த மருத்துவ அலுவலர் அறிவுரை

By செய்திப்பிரிவு

டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக் கையுடன் செயல்பட வேண்டும் என திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மழைக்கால நோய்களின் பட்டியலில் டெங்கு காய்ச்சலும் அடங்கும். நல்ல தண்ணீரில் உருவாகக் கூடிய ஒருவகை கொசுக்கள் பகல் நேரத்தில் கடிப்பதால் இந்த காய்ச்சல் ஏற்படுகிறது. அதிக காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, வயிற்று வலி, கண்ணுக்குப் பின்புறம் வலி, எலும்பு வலி ஆகியவை தான் இந்த காய்ச்சலுக்கு முக்கிய அறிகுறிகளாகும். ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவரை அணுகி முறையான பரிசோதனைகள் செய்து நோய் தீவிரமாகாமல் காத்துக் கொள்ளலாம்.

சித்த மருத்துவத்தில் நிலவேம்பு குடிநீர், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தி உடலில் போதுமான அளவு நீர்ச்சத்தை தக்கவைத்து, காய்ச்சலுடன் கூடிய வலி மற்றும் வீக்கத்தை குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தால், சித்த மருத்துவரின் அறிவுரைப்படி, 240 மில்லி தண்ணீருடன் 5 கிராம் அளவு நிலவேம்பு குடிநீர் சூரணத்தை எடுத்து நன்கு கொதிக்க வைத்து 60 மில்லியாக சுண்டக்காய்ச்சி வடிகட்டி காலை, மதியம், இரவு என 3 வேளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், சித்த மருந்துகளை சித்த மருத்துவர்களின் அறிவுரைப்படி மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்