தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி கட்டிடங்களின் உறுதித்தன்மையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் அவர்கூறியதாவது: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு வரும் மக்கள் முகக்கவசம் அணியவில்லை என்றால், முகக்கவசம் வழங்கப்படுகிறது. கூடுதல் கவுன்ட்டர்கள் அமைத்து சமூக இடைவெளியுடன் மனுக்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் கரோனா தடுப்பூசி முகாம் சுமார் 1,600 இடங்களில் நடைபெற்றது. அன்று 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி உள்ளோம். இதன் மூலம் அன்றைய தினம் தமிழகத்தில் அதிக தடுப்பூசி போட்ட மாவட்டங்களில் 6-வது இடத்தை தூத்துக்குடி பிடித்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு தகுதியானவர்கள் 14 லட்சம் பேர் உள்ளனர். இதில் 8.50 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இது 60 சதவீதம் ஆகும். 3 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இது 21 சதவீதம் ஆகும். குறைந்தது 90 சதவீதத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அப்போதுதான் 3-வது அலை வந்தாலும் பாதிப்புகளை தடுக்க முடியும். கடைகளில் பணியாற்றும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டால், அந்த கடையில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்படும். அந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளதாஎன்பதை பார்த்து பொதுமக்கள் கடைக்கு செல்ல வேண்டும்.
நவம்பர் 1-ம் தேதி 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே அனைத்து பள்ளிகளிலும் முழுமையாக சுத்தம் செய்து வகுப்புகள் நடந்து வருகின்றன. தற்போது பொதுப்பணித்துறை அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளிகளிலும் கட்டிடங்கள் உறுதியாக உள்ளதா என ஆய்வு செய்துவருகிறோம். இந்த பணி முடிவடைந்த பிறகு மீண்டும் ஒருமுறை அனைத்து பள்ளிகளும் சுத்தம் செய்யப்படும் என்றார் ஆட்சியர்.
பெண்ணுக்கு உடனடி வேலை
மக்கள் குறைதீர் நாள் முகாமில்தூத்துக்குடி தபால் தந்தி காலனியைச் சேர்ந்த பி.தெய்வானை என்பவர் ஆதரவற்ற விதவை என்ற அடிப்படையில் வேலை வேண்டி நேற்று காலை ஆட்சியரிடம் மனு கொடுத்தார்.
உடனடியாக அந்த மனுவை பரிசீலித்து தூத்துக்குடி சிப்காட் நில எடுப்பு பிரிவில் புல உதவியாளர் பணி வழங்கி அதற்கான ஆணையை அவருக்கு ஆட்சியர் வழங்கினார். மேலும், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் முதல் வீடு கட்டும் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் உதவித் தொகையை ஆட்சியர் வழங்கினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago