திருநெல்வேலி அருகே மானூரில் டயர் வெடித்ததால் அரசுப் பேருந்து சாலையோர கடையில் மோதியதுடன் பள்ளத்தில் பாய்ந்தது. பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.
தேனி மாவட்டம் குமுளியிலிருந்து நாகர்கோவிலுக்கு அரசுப் பேருந்து நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு வந்தது. கன்னியாகுமரி மாவட்டம் சாந்தபுரத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (47) ஓட்டுநராகவும், ஆரல்வாய்மொழியை சேர்ந்த முருகன் (46) நடத்துநராகவும் இருந்தனர். பேருந்தில் 42 பயணிகள் இருந்தனர்.
அதிகாலை 3 மணியளவில் மானூர் அம்பலத்து ஊருணி பகுதிக்கு பேருந்து வந்தபோது, திடீரென டயர் வெடித்தது. இதையடுத்து ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு பாலம் மற்றும் கரும்புச் சாறு கடையில் மோதி அருகிலுள்ள பள்ளத்தில் பாய்ந்தது. ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்திலிருந்து பேருந்து தப்பியது. பயணிகள் காயமின்றி தப்பினர். மானூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பயணிகள் மாற்றுப்பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். பள்ளத்தில் சிக்கிய பேருந்து மீட்பு வாகனம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago