உதகையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பது தொடர்பாக, மத்திய அரசு நிறுவனமான எச்பிஎப் தொழிற்சாலை வளாகத்தில் உள்ளகட்டிடங்கள், காலியாக உள்ள பகுதிகளை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.
நீலகிரி மாவட்டத்தில் அரசின் பல்வேறு திட்டப் பணிகளுக்காக தேவைப்படும் இடங்களான உதகையில் ஹெச்பிஎப் பிலிம் தொழிற்சாலை, குன்னூர் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி, பந்துமை ஆகிய பகுதிகளை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீலகிரி மாவட்டம் உதகையில் 300 ஏக்கரில் அமைந்துள்ள ஹெச்பிஎப் தொழிற்சாலை நலிவடைந்த நிறுவனமாக அறிவிக்கப்பட்டு, கடந்த சில ஆண்டுகளாகமூடப்பட்டுள்ளது. தொழிற்சாலையின் நிலப்பரப்பை 3 பகுதிகளாக 90 ஏக்கர் வீதம் பிரித்தால், தொழில்பூங்கா அமைக்க 90 ஏக்கர் நிலம் போதுமானதாக இருக்கும்.மீதமுள்ள இடத்தில் வேறு தொழிற்சாலை கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய கல்வியியல் கல்லூரி அமைக்க அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியையும், குன்னூர் தொகுதியில் புதிய அரசு கலைக் கல்லூரி அமைக்க பந்துமை பகுதியில் இடம் தேர்வு செய்வதற்காகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, குன்னூர் சார்-ஆட்சியர் தீபனா விஸ்வேஸ்வரி, நிலஅளவைத் துறை உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago