பின்னலாடை உற்பத்தி நகரமானதிருப்பூரில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கி, பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் பணி செய்து வருகின்றனர். கரோனா தொற்று பாதிப்புமற்றும் அதனைத் தொடர்ந்த கட்டுப்பாடுகளால் சொந்த மாநிலங்களுக்கு சென்ற தொழிலாளர்கள், கடந்த ஒரு மாதமாக திருப்பூருக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். அவர்களோடு புதிதாக தொழிலாளர்களும் அதிகளவில் வருகின்றனர்.
திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் தற்போதுதீபாவளிக்கான ஆர்டர்களை முடித்துக் கொடுக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு கூடுதல் பணியாளர்கள் தேவை உள்ளதால், வடமாநிலத் தொழிலாளர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை தொழில் துறையினர் செய்துள்ளனர்.
இதனால் திருப்பூருக்கு ரயில்கள் மூலமாக வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது.
இந்நிலையில், வடமாநிலங்களில் இருந்து வந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் திருப்பூர் ரயில் நிலையத்தில் கரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. 1,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களிடம் கரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதேபோல முதல் தவணை மற்றும் இரண்டாம்தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு, அதற்கேற்ப தடுப்பூசி செலுத்தும் பணியிலும் மாநகராட்சி சுகாதாரத் துறையினர் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத் துறையினர் கூறும்போது, ‘‘ரயில்களில் வரும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு, ரயில் நிலையத்திலேயே கரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து தொழிலாளர்கள் பரிசோதனை செய்து கொண்டனர்.பரிசோதனை மற்றும் தடுப்பூசிசெலுத்திய பிறகே திருப்பூர் நகருக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். தொடர்ந்து கண்காணிக்க வசதியாக அவர்கள் தங்கும் முகவரி, வேலை செய்யும் நிறுவனத்தின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் பெறப்படுகின்றன’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago