1 முதல் 8-ம் வகுப்பு வரை - பள்ளிகள் திறப்பை ஒருவாரம் தள்ளிவைக்க வேண்டும் : தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை நவம்பர் 8-ம் தேதிக்கு பின்னர் திறக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி யில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதிய தொழில் தொடங்குவோருக்கு தமிழக அரசு கடன் வசதிகளை எளிமையாக்கி வழங்க வேண்டும். நிலக்கரி தட்டுப்பாட்டால் பல்வேறு தொழில்கள் பாதிக்கும் சூழல் நிலவுகிறது. மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்பட்டு நிலக்கரி தட்டுப்பாடு இல்லாத சூழலை உருவாக்க வேண்டும்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் விதிமீறல்கள் நிகழ்ந்துள்ளன. ஜனநாயகத்தில் மக்களுக்கு நம்பிக்கை உருவாகும் வகையில் தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும்.

கரோனா தொடர்பான விழிப்புணர்வை கிராமம் முதல் நகரம் வரை அரசுகள் ஏற்படுத்த வேண்டும். தீபாவளியையொட்டி, பொது இடங்களில் கூட்டம் அதிகம் திரளும். இந்த சூழலில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை நவம்பர் 1-ம் தேதி பள்ளிகளை திறக்கும் நடவடிக்கையை நவம்பர் 8-ம் தேதிக்கு பின்னர் அரசு மேற்கொள்ள வேண்டும்.

வாக்குறுதிகளை அள்ளி வீசி வெற்றி பெற்ற ஆளும் கட்சியினர் மக்களுக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியதாக தெரியவில்லை. தேர்தலில் அறிவித்த பல முக்கிய வாக்குறுதிகளை மக்கள் எதிர்பார்த்து இருப்பதை உணர்ந்து அவற்றை அரசு நிறைவேற்ற வேண்டும்.

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை இல்லை. ஆனால், கட்டுப்பாட்டுடன் மக்கள் செல்லும் கோயில், மசூதி, தேவாலயங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறுக் கிழமைகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் கோரிக்கை, ஆர்ப்பாட்டம் மூலம் வலியுறுத்துகின்றனர் என்பதற்காக கவுரவம் பார்க்காமல், மக்கள் மனநிலையை அறிந்து அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்