பாவேந்தர் பாரதிதாசன் இல்லம் மோசமான நிலையில் இருப்பதாக ஆளுநர், முதல்வரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புதுவை மாநிலத்துக்கு பெருமை தரும் அடையாளமாக திகழ்கிறது பெருமாள் கோயில் தெருவில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம். கடந்த 29.04.1971-ல் பாவேந்தர் நினைவகம் திறந்து வைக்கப்பட்டது. அவருடைய குடும்பத்தினர் அன்றைய காலகட் டத்தில் மக்கள் பயன்பாட்டுக்காக அதனை அரசிடம் ஒப்படைத்தனர்.
மோசமான நிலையில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகத்தின் மறுசீரமைப்பை சரியாக செய்யக்கோரி துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோருக்கு பாரதிதாசன் பேரன் செல்வம் மனு அனுப்பியுள்ளார். அந்த மனு விவரம்:
பாவேந்தர் பாரதிதாசன் இல்லத்தை அரசிடம் ஒப்படைத்தது குறித்த கல்வெட்டு இல்ல முகப்பில் உள்ளது. ஆனால் அது பலகை வைத்து மூடப்பட்டுள்ளது. அங்கு பாரதிதாசன் குறித்த பல விவ ரங்கள் அடங்கிய பலகைகள் இடக்கு மடக்காக உள்ளன. இதனால் பயனொன்றுமில்லை.
அண்மையில் ஆளுநர் ஆணைப்படி இந்த நினைவு இல்லம் புனரமைப்பு பணிகள் தொடங்கின. இந்தப் பணிகளை புதுவை அரசு பொதுப்பணித்துறை செய்கிறது. இவை இன்னமும் முழுமை பெறவில்லை. இந்த கட்டிடத் தூண்களில் பூசப்பட்ட வண்ணங்கள் சில நாட்களில் பல் இளிக்கின்றன. மலேஷிய தமிழர்கள் அளித்த பாவேந்தர் சிலைக்கு மழைநீரால் ஆபத்து ஏற்படும் அச்சம் உள்ளது.
மேலும், பாவேந்தரின் பல்வேறு பாடல்களின்அடிப்படையிலான பாடல் வரிகள் பொறிக்கப்பட்டவண்ண ஓவியங்கள் இருந்தன. அந்தக் கவிதைகள்தற்போது இல்லாமல் ஓவியங்கள் மட்டுமே உள்ளன. பல படங்களை காணவில்லை. கார ணம் கேட்டால் இன்னமும் புதுப்பிப்புப் பணிகள் நிறைவேறவில்லை என்று கூறுகின்றனர்.
வரலாற்று சிறப்பு மிக்க எங்கள் பாட்டனார் பாவேந்தர் இல்லத்துக்கு இந்த வகையில் ஏற்பட்ட மோசமான, பரிதாபமான நிலைக்கு யார் காரணமோ அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், புனரமைப்பு பணிகளை விரைவில் முடிக்கவும் ஆணையிட வேண்டும்.
இந்த நினைவு அருங்காட்சியகம் தொடங்கி 50 ஆண்டுகளாகிறது. இதனை முழுமையான ஆராய்ச்சி மையமாக அறிவிக்க வேண்டுகிறோம். எனவே, இதன் பொன்விழாவை ஆண்டு முழுவதும் அரசு பொருத்தமான முறையில் கொண்டாட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago