பெண் குழந்தைகளை பாதுகாக்க சிலம்பம் கற்றுத்தர வேண்டும் : தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

பெண் குழந்தைகளை பாதுகாக்க சிலம்பம் கற்றுத் தர வேண்டும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

மதுரையில் தீனதயாள் சேவை மையம், உலக கலை, விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், தென் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் பி.ராஜசேகர், சிலம்பாட்டக் கழக மாவட்ட தலைவர் பெரீஸ் மகேந்திரவேல் தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், சிறந்த வீரர்களுக்குப் பரிசு, சான்றிதழ் வழங்கி பேசியதாவது:

மதுரையில்தான் ஆரம்பக் கல்வியை தொடங்கினேன். அப்போது எனது தந்தை பெருமாள் கோவில் தெருவில் டுட்டோரியல் கல்லூரி நடத்தினார். மதுரைக்கு எப்போது வந்தாலும், மீனாட்சியை தரிசிக்காமல் சென்றதில்லை. அதற்கான வாய்ப்பு நேற்று கிடைக்கவில்லை. தற்போது புதுச்சேரியில் கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்க தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

மருத்துவராக நான் வரவேற்கும் விளையாட்டு சிலம்பம். இது மனநலம் காத்து, ஒற்றுமையை ஏற்படுத்துகிறது. உலக மனநல நாளில் இந்த விழாவில் பங்கேற்பது மேலும் மகிழ்ச்சி. பெண் குழந்தைகளைப் பாதுகாக்க, சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளை கற்றுக் கொடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரியில் தற்காப்புக் கலையில் சிலம்பத்தை ஒரு பாடமாக சேர்க்க வேண்டும் என்று பேசினார்.

நிகழ்ச்சியில் நீதிபதி ஜிஆர்.சுவாமிநாதன், மருத்துவர் நாகேந்திரன், பாஜக மாநில செயலாளர் சீனிவாசன், மாநகர் மாவட்ட தலைவர் கேகே. சீனிவாசன், புறநகர் மாவட்ட செயலர் மகா சுசீந்திரன், துணைத் தலைவர் ஹரிகரன், மாநில துணைத் தலைவர் மகாலட்சுமி, முன்னாள் மாவட்டத் தலைவர் சசிராமன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிலம்பம் மாஸ்டர் முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்