கரூர் நகராட்சி பகுதியில் முழுமை யான புதை சாக்கடை அமைக்கும் திட்டத்துக்கு ரூ.360 கோடிக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாக மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
கரூரில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேற்று செங்குந்தபுரம் 80 அடி சாலையில் தூய்மை கரூர் திட்டத்தின் கீழ் சாக்கடை கழிவுகள் அகற்றப்படு வதை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பிறகு தூய்மைப் பணியாளர்களுடன் சேர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி அப்பகுதியில் உள்ள டீ கடையில் டீ அருந்தினார்.
பின்னர், அமைச்சர் வி.செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியது: கரூர் நகராட்சியில் 2,968 தெருக்கள், 68 கி.மீட்டர் நீளத்துக்கு வடிகால்கள், 412 கி.மீட்டர் நீளத்துக்கு சாலைகள் உள்ளன. ஒரு நாள் ஒரு வார்டு, ஒரு நாள் ஒரு ஊராட்சி என்ற சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டு, காலை 6 மணி முதல் ஒவ்வொரு வார்டாக பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறேன்.
கரூரில் ஜவுளி ஏற்றுமதி, கொசுவலை, பேருந்து கூண்டு கட்டுதல் உள்ளிட்ட தொழில்களை கொண்ட தொழில் நகரம். ரூ.8,000 கோடி முதல் ரூ.10,000 கோடிக்கு ஏற்றுமதி செய்யும் நகரம். இதனால் நகரத்தின் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும். எனவே, முழுமையாக புதை சாக்கடை திட்டம் மேற்கொள்ள ரூ.360 கோடி, குடிநீர் விநியோக திட்டத்தில் புதிய குழாய்கள் மாற்றி அமைக்க ரூ.40 கோடியில் சிறப்பு திட்ட பணிகள் மேற்கொள்ள அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், கரூர் நகராட்சியில் புதை வடிகால், குடிநீர் திட்டம், வடிகால் வசதி, சாலைகள் உள்ளிட்ட மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.1,000 கோடி அளவுக்கு நிதி தேவைப்படுகிறது. இதற்கான நிதியை முதல்வரிடம் கேட்டு பெற்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago