ஆமை வேகத்தில் நடந்து வரும் கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பணி - திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி சாலையில் போக்குவரத்து நெரிசல் : இம்மாதம் இறுதிக்குள் பணிகள் முடிக்க நடவடிக்கை

By ந. சரவணன்

திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி பிரதான சாலையில் ஆமை வேகத்தில் நடைபெறும் சிறுபாலம் (கல்வெர்ட்டு) சீரமைக்கும் பணியால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி செட்டியப்பனூர் கூட்டுச்சாலையில் இருந்து சேலம் மாவட்டம் ஊத்தங்கரை வரை 4-ம் வழிச்சாலை விரிவாக்கப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. பகுதி வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணிகளால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பொன்னேரி, ஜோலார்பேட்டை, ஆசிரியர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் சாலை விரிவாக்கப்பணிகளால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அவ் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், தற்போது திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி பிரதான சாலையில் கழிவுநீர் கால்வாய் (கல்வெர்ட்டு) சீரமைப்புப்பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்து அவ் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த மாதம் ஆரம்பிக்கப் பட்ட கழிவுநீர் கால்வாய் (கல்வெர்ட்டு) சீரமைப்புப் பணிகள் காலதாமதாக நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் பரிதவிக்கின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் 20 மீட்டர் நீளமும், 2 மீட்டர் அகலத்துக்கு கழிவுநீர் கால்வாய் (கல்வெர்ட்டு) சீரமைப்புப்பணிகள் கடந்த சில நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. 5 நாட்களில் முடிக்க வேண்டிய பணி இழு பறியாகியுள்ளது. இதனால், அவ் வழியாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ் வாகனம், பள்ளி, கல்லூரி வாகனங்கள் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

போக்குவரத்து காவலர்களும் அங்கு பணியில் இல்லாததால் இரண்டு புறங்களில் இருந்து வரும் வாகனங்கள் எதிர் எதிரே வரிசைக்கட்டி நிற்கின்றன. எனவே, இப்பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்தை சீர்படுத்த வேண்டும்’’ என்றனர்.

இது குறித்து மாநில நெடுஞ் சாலைத்துறை உதவி பொறியாளர் சீனிவாசன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, "கழிவுநீர் கால்வாய் (கல்வெர்ட்டு) சீரமைப்புப்பணிகள் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்பு, பாதாள சாக்கடை குழாய் இணைப்புகள் அங்கு அதிகமாக உள்ளதால்மிக கவனமுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

35 சதவீதம் பணிகள் முடிவுப் பெற்றுள்ளது. இம்மாதம் இறுதிக் குள் இப்பணிகள் முடிக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கால்வாய் சீரமைப்புப் பணிகள் வெகு விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்