விருதுநகர் உட்பட 5 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் - முதியோர், பெண்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு :

By செய்திப்பிரிவு

விருதுநகர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதியோர், பெண்கள் ஆர்வத்துடன் காத்திருந்து வாக்களித்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் 1 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 3 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 4 கிராம ஊராட்சி தலைவர் மற்றும் 17 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் என மொத்தம் 25 பதவியிடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

மொத்தம் 91 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 162 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பதற்றமானவையாக கண்டறியப்பட்ட 17 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப் பதிவு நிகழ்வுகள் வீடியோ பதிவு செய்யப்பட்டன. பல வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வமுடன் காத்திருந்து வாக்களித்தனர். பாவாலி உட்பட பல்வேறு மையங்களில் நடந்த வாக்குப் பதிவை ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 4 கிராம ஊராட்சி தலைவர்கள், 3 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 8 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் ஒரு மாவட்ட ஊராட்சி வார்டு பதவிக்கு 7 பேரும், 4 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 13 பேரும், 3 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 37 பேரும் போட்டியிட்டனர்.

மொத்தம் 153 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 65 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டன. மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ம.காமாட்சிகணேசன் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் சக்கரக்கோட்டை ஊராட்சிக் குட்பட்ட காவலர் குடியிருப்பில் இருக்கும் சமுதாயக்கூடம் உட்பட பல்வேறு இடங்களில் அமைக்கப் பட்டிருந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரில் சென்று வாக்குப்பதிவு நடப்பதை பார்த்தார்.

தேனி

தேனி மாவட்டம், முத்தாலம்பாறை, நாகலாபுரம், ராஜதானி ஆகிய இடங்களில் 3 ஊராட்சி வார்டு உறுப் பினர்கள், ஆண்டிபட்டி ஒன்றிய கவுன்சிலர், கதிர்நரசிங்கபுரம் ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட 5 இடங்களுக்கான ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதற்காக 22 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 11 ஆயிரத்து 945 பேர் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி 71.32 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

சிவகங்கை

கண்ணங்குடி ஒன்றியம் 3-வது வார்டு கவுன்சிலர், காளையார்கோவில் ஒன்றியம் 6-வது வார்டு கவுன்சிலர், 2 ஊராட்சித் தலைவர், 11 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வாக்குப் பதிவு நடந்தது. இதில் கண்ணங்குடி 3-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் 64.09 சதவீதம், காளையார்கோவில் 6-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் 64.05 சதவீதம், 2 ஊராட்சித் தலைவர்களுக்கான தேர்தலில் 74.62 சதவீதம், 11 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் 59.71 சதவீதம் என மொத்தம் 65.41 சதவீத வாக்குகள் பதிவாகின.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள எத்திலோடு, ஆண்டிபட்டி ஆகிய ஊராட்சி ஒன்றிய கவுன்சில் வார்டு உறுப்பினர், சத்திரப்பட்டி, வில்பட்டி ஆகிய 2 ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.

இதில் எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக வாக்குப்பதிவு நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தல்களில் மொத்தம் 65.63 சதவீத வாக்குகள் பதிவாகின.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்