வாக்குச்சாவடியை கைப்பற்ற முயற்சித்ததாக எம்எல்ஏ, திமுகவினர் மீது அதிமுக புகார் :

By செய்திப்பிரிவு

தேர்தல் நடத்தை விதிகளை மீறி, வாக்குச்சாவடிக்குள் நுழைந்து கைப்பற்ற முயற்சி செய்ததாக எம்எல்ஏ மற்றும் திமுகவினர் மீது மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக மாவட்டச் செயலாளர் புகார் அளித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் 19 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 3 ஒன்றியக் குழு உறுப்பினர்கள், 2 ஊராட்சித் தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. அப்போது, மணப்பாறை எம்எல்ஏ பி.அப்துல் சமது, திமுக முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன் உள்ளிட்ட திமுகவினர், வையம்பட்டி ஒன்றியம் 6-வது வார்டு(தோப்புப்பட்டி) உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற்ற 31-வது வாக்குச்சாவடிக்குள் தேர்தல் நடத்தை விதிகளை மீறி நுழைந்து கைப்பற்ற முயற்சி செய்ததாகக் கூறி, அதிமுகவினர் வாக்குச்சாவடி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சு.சிவராசுவுக்கு, அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார் புகார் அனுப்பினார். அதில், ‘‘வையம்பட்டி ஒன்றியம் 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற்ற 30, 31, 37 ஆகிய வாக்குச்சாவடிகளுக்குள் மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமது, திமுக முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன் உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர், தேர்தல் நடத்தை விதிகளை மீறி புகுந்து, வாக்குச்சாவடியைக் கைப்பற்ற முயற்சி செய்தது ஜனநாயக படுகொலை. அவர்கள் மீது மாநில தேர்தல் ஆணையமும், மாவட்ட நிர்வாகமும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமது-விடம் கேட்டபோது அவர் கூறியது: 31-வது வாக்குச்சாவடிக்குள் அதிமுக நிர்வாகி ஒருவர் அடிக்கடி சென்று வருவதாக தகவல் வந்ததால், அதுகுறித்து விசாரிப்பதற்காக சென்றோம். அதிமுகவினர் அரசியலுக்காக வேண்டுமென்றே குற்றம்சாட்டுகின்றனர். அவர்கள் சொல்வதில் உண்மையில்லை’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்