வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் நடந்த மினி மாரத்தான் போட்டியில், திருநெல்வேலியைச் சேர்ந்த மாணவர், செங்கோட்டை மாணவி ஆகியோர் முதலிடம் பெற்றார்.
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி நடத்திய இப்போட்டியை, கனிமொழி எம்.பி., சமூக நலன்- மகளிர் உரிமைத்துறை அமைச்சர்பெ.கீதாஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டியில்சுமார் 1,700 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். வ.உ.சி. கல்லூரியில் தொடங்கி தமிழ்சாலை, வ.உ.சி. சாலை, வ.உ.சி. பழைய துறைமுகம், பனிமயமாதா ஆலயம், ஜார்ஜ் சாலை, தலைமை தபால் நிலையம், தெற்கு காவல் நிலையம் வழியாக 9 கி.மீ தொலைவுக்கு நடந்த ஓட்டம், வ.உ.சிதம்பரம் கல்லூரியில் நிறைவுபெற்றது.
போட்டியில் ஆண்கள் பிரிவில், திருநெல்வேலி செயின்ட் ஜான்ஸ் கல்லூரி மாணவர் பசுபதி முதல் இடத்தையும், சென்னை லயோலா கல்லூரி மாணவர் அஜித் 2-ம் இடத்தையும், திருநெல்வேலி சதக்கத்துல்லா கல்லூரி மாணவர் நவீன் பிரபு 3-ம் இடத்தையும் பிடித்தனர்.
பெண்கள் பிரிவில் தென்காசி மாவட்டம் வெங்கடேஸ்வராபுரம் கிராம கமிட்டி பள்ளி மாணவி ஐஸ்வர்யா முதல் இடத்தையும், விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ராதிகா 2-ம் இடத்தையும், நாகலாபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கோகிலா 3-ம் இடத்தையும் பிடித்தனர்.
போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிக்கு ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகையும், 2-ம் பரிசு ரூ. 4 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 4-ம் பரிசு ரூ. 2 ஆயிரம், 5 முதல் 10 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ. ஆயிரம் வழங்கப்பட்டது.
போட்டியில் வெற்றி பெற்ற வர்களுக்கு கனிமொழி எம்.பி. பரிசுத் தொகை, வெள்ளி பதக்கம், சான்றிதழ்களை வழங்கினார். மேலும், பங்கேற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி கோட்டாட்சியர் சிவசங்கரன், வ.உ.சிதம்பரம் கலை கல்லூரி செயலாளர் சொக்கலிங்கம், கல்லூரி முதல்வர் வீரபாகு, உடற்கல்வி பேராசிரியர் சிவஞானம், மாவட்ட விளையாட்டு அலுவலர் பேட்ரிக் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago