வேலூரில் கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம் - பொதுமக்கள் சாலை மறியல் :

By செய்திப்பிரிவு

வேலூர் மாநகராட்சியில் கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதை கண்டித்து ஆற்காடு சாலையில் நேற்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சைதாப்பேட்டை, காகிதப்பட்டரை நைனியப்பன் தெரு, ராமர் பஜனை கோயில் தெரு உள்ளிட்ட பகுதி மக்களுக்கு சைதாப்பேட்டை முருகர் கோயில் பின்புறம் உள்ள நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து நேற்று காலை குழாய் மூலம் விநியோகம் செய்யப்பட்ட குடிநீருடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதை மக்கள் பார்த்துள்ளனர்.

இதையடுத்து, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் பார்த்த போது கழிவுநீர் கலந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனைக் கண்டித்து 30-க்கும் மேற்பட்டோர் சைதாப்பேட்டை முருகர் கோயில் அருகே மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஆற்காடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த வேலூர் வடக்கு காவல் துறையினர் மற்றும் மாநகராட்சி இரண்டாவது மண்டல உதவி ஆணையர் மதிவாணன் உள்ளிட்டோர் விரைந்து சென்று அவர்களை சமாதானம் செய்தனர்.

மேலும், மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் உள்ள கழிவுநீரை அகற்றி சுத்தம் செய்து மீண்டும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் ஏற்றி விநியோகம் செய்யப்படும் என தெரிவித்தனர். தற்போதைக்கு 2 டிராக்டர்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதியளித்தனர். இதனையேற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்