திருவண்ணாமலை மாவட்டத்தில் 35 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் 78.26 சதவீத வாக்குகள் பதிவாகி யிருந்தன.
திருவண்ணாமலை மாவட் டத்தில் காலியாக உள்ள 66 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த மாதம் 15-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. 174 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 4 பேரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 52 பேர் தங்களது வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர். துரிஞ்சாபுரம் ஒன்றியம் கோவூர், பெரியகிளாம்பாடி, சானானந்தல், கலசப்பாக்கம் ஒன்றியம் சேங்கபுத்தேரி மற்றும் வெம்பாக்கம் ஒன்றியம் இருமரம் ஆகிய 5 ஊராட்சிகள் மற்றும் 26 வார்டு உறுப்பினர்கள் என 31 பதவிகளுக்கு போட்டியின்றி உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
செய்யாறு ஒன்றியம் 10-வது வார்டு, பெரணமல்லூர் ஒன்றியம் 12-வது வார்டு, புதுப்பாளையம் ஒன்றியம் 11-வது வார்டு என 3 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு திமுக, அதிமுக வேட்பாளர்கள் உட்பட 12 பேரும், அனக்காவூர் ஒன்றியம் கோட்டகரம், ஆரணி ஒன்றியம் அக்கராபாளையம், செங்கம் ஒன்றியம் இளங்குன்னி, கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் அரும்பாக்கம், வேளானந்தல், போளூர் ஒன்றியம் பொத்தேரி ஆகிய 6 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 16 பேரும் மற்றும் 26 வார்டு உறுப்பினர் பதவிக்கு 59 பேரும் என மொத்தம் 35 பதவிகளுக்கு 87 பேர் போட்டியிடுகின்றனர்.
இதையடுத்து, 35 பதவி களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதற்காக அமைக்கப்பட்டிருந்த 77 வாக்குச் சாவடிகளில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. காலையில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கடலாடியில் நடைபெற்ற வாக்குப்பதிவை ஆட்சியர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 10-க்கும் மேற் பட்ட காவல்துறையினர் பாது காப்புப் பணியில் ஈடுபட்டனர். பதற்றமானவை என கண்டறி யப்பட்ட 20 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட் டிருந்தது.
பகல் 12 மணிக்கு பிறகு வாக்குப்பதிவு மந்தமானது. வாக்காளர்களின் வருகை குறைந் தது. இதனால் பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் வாக்குச் சாவடி அலுவலர்கள் மற்றும் காவல்துறையினரை மட்டுமே காணமுடிந்தது. 15,538 ஆண்கள், 16,014 பெண்கள், ஒரு 3-ம் பாலினத்தவர் என மொத்தம் 31,553 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றனர். இதில் பிற்பகல் 3 மணி வரை 10,198 ஆண்கள், 11,226 பெண்கள் என 21,424 பேர் வாக்களித்துள்ளனர். 67.90 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரு சில இடங்களில் டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 12,056 ஆண்கள் மற்றும் 12,637 பெண்கள் என மொத்தமாக 24,693 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 78.26 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago