ஊரக உள்ளாட்சித் தேர்தலில் - பரிசு மழையில் நனையும் வாக்காளர்கள் :

By ந.முருகவேல்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்களை கவர விதவிதமாக பரிசுப் பொருட்களும் கை நிறைய பணத்தையும் வழங்குவதால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று நடைபெறும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் களை கட்டியிருக்கிறது.

ஊரகப் பகுதிி உள்ளாட்சித் தேர்தல் என்றாலே அரசியல் கட்சிகளைக் காட்டிலும் தனிமனித செல்வாக்கின் அடிப்படையிலேயே வாக்குகள் பதிவாகும். போட்டியில் வெற்றி தோல்வியைக் காட்டிலும் தங்களது கவுரவமே இதில் மேலோங்கி நிற்கும். குறிப்பாக ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான போட்டி எனும் போது, ஒரே ஊரில் உறவினர்களுக்கு இடையே போட்டிகள் நடைபெறும் சூழலும் உள்ளது.

குறைந்த வாக்காளர்கள் என்பதால், போட்டியிடும் வேட்பாளர்களும் செலவைப் பற்றிக் கவலைப்படாமல், கவுரவத்தை தக்க வைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தில் பணத்தை தண்ணீராக செலவழிப்பது ஊரக உள்ளாட்சித் தேர்தல் என்றால் மிகையல்ல.

ஒருபுறம் பணம், மறுபுறம் பரிசுப் பொருட்கள் என வாக்காளர்களை கவர விதவிதமாக பொருட்களை வழங்கி அவர்களை திக்குமுக்காடச் செய்து விடுகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சீப்பு, தட்டு, குடம், கண்ணாடி, குத்துவிளக்கு, அன்னக்கூடை, குடை, பல்பு, போன்ற சின்னங்களை பெற்ற வேட்பாளர்கள் தனது சின்னத்தை நினைவில் நிறுத்தும் வகையில் அதை வாரி வழங்குவதும், சிலர் தட்டுடன் தட்சணையாக 100 முதல் 500 வரை வழங்கி குளிர்வித்து வருகின்றனர். அடுத்த மாதம் தீபாவளிப் பண்டிகை என்பதால், அதைக் கருத்தில் கொண்ட சில வேட்பாளர்கள் புடவை, பேண்ட், சட்டை, வேஷ்டி சகிதமாக வாக்காளர்களை சந்தித்து வருகின்றனர்.

முதல்கட்ட தேர்தலைத் தொடர்ந்து இன்று நடைபெறும் இரண்டாம் கட்டத் தேர்தலிலும் ஊரகப் பகுதிகளில் இதே நிலை நீடிக்கிறது.

‘யானை வரும் பின்னே மணி யோசை’ வரும் முன்னே என்பது போல், ஒவ்வொரு வாக்காளர் வீட்டையும் ‘மணி’ முதலில் செல்ல, அதைத்தொடர்ந்து வேட்பாளர் வருவதும், மணியின் சத்தம் கேட்ட எதிர் வேட்பாளர் அதை உரிய அதிகாரிக்கு போட்டுக் கொடுக்கும் வைபவங்களும் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்