ஒன்றரை லட்சம் சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் : முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி பேச்சு

By செய்திப்பிரிவு

‘‘தமிழகத்தில் ஒன்றரை லட்சம் சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும்,’’ என முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தெரிவித்தார்.

சிவகங்கையில் நடந்த தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட மாநாட்டில் அவர் பேசியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்றது கிராம மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பணிபுரியும் ஒன்றரை லட்சம் சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும். அவர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

எம்பி, எம்எல்ஏக்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும் பழைய ஓய்வூதியத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் மற்ற ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் தமிழகத்தில் முழுமையாக செயல்படுத்தவில்லை.

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பிடித்தம் செய்த பணம் எங்கே இருக்கிறது என்பதே கேள்விக்குறியாக உள்ளது. இதனால் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பிரதமர் மோடி ஆட்சியில் பொதுதுறைகள் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஏழை மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது, என்றார்.

மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் மாவட்ட தலைவராக முத்துக்குமார், மாவட்டச் செயலாளர் மிக்கேலம்மாள், மாவட்ட பொருளாளர் அலமேலு மங்கை, துணைத் தலைவர்களாக ரத்தினம், சாந்தா, பாலசுப்பிரமணியன், மாவட்ட இணைச் செயலாளர்களாக பாண்டி, வேலுச்சாமி, செல்வராணி, தமிழரசி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்