ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் : கனிமொழி எம்.பி. அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில்நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை விரைந்து முடிக்குமாறு கனிமொழி எம்.பி. அறிவுறுத்தினார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் சாலை பணிகள்,வாகன நிறுத்துமிடம், பேருந்து நிலைய பணிகளை கனிமொழி எம்.பி. ஆய்வு செய்தார். தொடர்ந்துமாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாநகராட்சி ஆணையர் தி.சாரு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாநகராட்சி பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் 21 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை கனிமொழி எம்.பி. வழங்கினார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 1,000 பேருக்கு ரூ.1.4 கோடியில் கையடக்க கணினி (டேப்) வழங்கப்படுகிறது. முதல் கட்டமாக 10 மாணவ, மாணவியருக்கு கையடக்க கணினிகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி. கூறும்போது, “ ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் மழைநீர் தேங்கக்கூடிய 25 இடங்களில் சேமிப்பு தொட்டிகள் (சம்ப்) அமைத்து, 40 எச்பி மோட்டார் பொருத்தி மழைநீரை உறிஞ்சி வெளியேற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

பல இடங்களில் சாலை பணிகளில் பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. மழைநீர் வடிகால் மற்றும் சாலைப் பணிகளை மிக விரைவாக முடிக்க அறிவுறுத்தியுள்ளோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்