மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ‘மித்ரா’ பிரமாண்ட ஜவுளி பூங்கா திட்டத்தால் பல லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத் (சைமா) தலைவர் ரவி சாம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய வரலாற்றில் முதன்முறையாக, பிரமாண்ட ஜவுளிப்பூங்காவின் மூலம், மிக அதிக உற்பத்திக் கொள்ளளவைக் கொண்ட ஒருங்கிணைந்த ஜவுளி ஆலைகளை நிறுவ அதிகளவு ஊக்குவிப்புகளுடன் ஒரு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அத்துடன், ரூ.4,445 கோடி நிதியை 5 ஆண்டுகளுக்கு ஒதுக்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய ஜவுளி மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியுஷ் கோயல் மற்றும் மத்திய அமைச்சரவைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி, ஜவுளி பொருள் பரிசோதனை கூடங்கள், ஆராய்ச்சி கூடங்கள்,புதியதாக தொழில் தொடங்குபவர்களுக்கு வேண்டிய வசதி, திறன்மேம்பாட்டு கட்டுமான வசதிகள், மருத்துவ வசதிகள், மின்சாரம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்றவைகள் ஒவ்வொரு பூங்காவையும் ஒரு நகரமாக உருவாக்கும். இதனால் பல லட்சக்கணக்கானோருக்கு வேலை கிடைப்பதோடு, பொது மக்களின் வாழ்க்கைத் தரமும் மேம்படும்.
மத்திய அரசு அறிவித்துள்ள ஏழு பூங்காக்களில் மாநிலத்துக்கு ஒரு பூங்கா வீதம் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களில் மொத்தம் நான்கு பூங்காக்கள் வரவுள்ளது வரவேற்புக்குரியது.
மத்திய அரசுடனும், நான்கு மாநில அரசுகளுடனும் சைமா ஒருங்கிணைந்து செயல்பட்டு நான்கு பூங்காக்களும் உலகில் தலைசிறந்த பூங்காக்களாக உருவாக முயற்சிகளை முன்னெடுக்கும். .
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக அகில இந்திய தலைவர்ஏ.சக்திவேல்: இந்தியாவில் 7 ஒருங்கிணைந்த 7 மெகா ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என மத்திய அரசு ஒப்பதல் அளித்துள்ளது. இதற்கு வரவேற்பை தெரிவித்துக்கொள்கிறோம். இதன் மூலம் ஜவுளித்துறையில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகளை ஈர்க்கலாம். இது உலகளாவிய போட்டித்தன்மையை உருவாக்கும். இதுபோல் லட்சக்கணக்கான வேலைகளை உருவாக்க பெரிதும் உதவும். அடுத்த சில ஆண்டுகளில்ஜவுளித்துறை தனது வருடாந்திர ஏற்றுமதியை இலக்கை விட அதிகரிக்கும் என நம்புகிறோம்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம்:இந்தியாவில் 7 மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இதனை ஏற்றுமதியாளர்கள் சங்கம்வரவேற்கிறது. வர்த்தக மேம்பாட்டுக்காக பூங்காக்களில் அமைகிற நிறுவனங்களுக்கு ஊக்கச்சலுகையும் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை அனைத்து ஏற்றுமதியாளர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago