கர்ப்பிணிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக ஆட்சியரிடம் புகார் - உடுமலை அரசு மருத்துவமனையில் அதிகாரிகள் விசாரணை :

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் காரத்தொழுவை சேர்ந்தவர் மருதமுத்து (33). தேங்காய் வெட்டும் கூலித் தொழிலாளி. இவரது மனைவிராஜராஜேஸ்வரி (24) . தம்பதிக்கு 4 வயதில்ஒரு மகன் உள்ளார். ராஜராஜேஸ்வரி மீண்டும் கர்ப்பமடைந்தார். கடந்த 23-ம் தேதிராஜராஜேஸ்வரிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட, தனியார் மையத்தில் ஸ்கேன் எடுத்தனர். அப்போது வயிற்றில் இருக்கும் சிசு உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ராஜராஜேஸ்வரி உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அதன் பின்னர் தனியார் மருத்துவ மனைக்குமாற்றப்பட்ட நிலையில் சிசு வயிற்றிலிருந்து வெளியே எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக ராஜராஜேஸ்வரியின் கணவர் மருதமுத்து கூறும்போது, ‘‘உடுமலை அரசு மருத்துவமனையில் குழந்தையை வெளியே எடுக்கவில்லை. அங்கிருந்த மருத்துவரிடம் முறையிட்டபோதும், குழந்தை தானாக வெளியே வந்துவிடும் என தெரிவித்தார். இந்த நிலையில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையின் உதவியை நாடினேன். அங்கு உடனே எடுத்துவிடலாம் என்றனர். இதற்காக ரூ.35 ஆயிரம் முன் பணம் கட்டினேன். தொடர்ந்து அடுத்த ஒரு மணிநேரத்தில் இறந்த நிலையில் பெண் சிசு வெளியே எடுக்கப்பட்டது. அங்கு சிகிச்சை மேற்கொண்டதுஅரசு மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் என தெரியவந்தது. அரசு மருத்துவமனையில் ஏன் சிகிச்சை அளிக்கவில்லை என்று கேட்டபோது, அவர் உரிய பதிலளிக்கவில்லை,’’ என்றார்.

இந்த நிலையில், உடுமலை அரசுமருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும்,மருத்துவர் நடந்துகொண்ட விதம் குறித்தும் மாவட்ட ஆட்சியர் சு.வினீத்துக்கு காரத்தொழுவை சேர்ந்தவர்கள் மனு அனுப்பினர். மனுவை பெற்ற ஆட்சியர் உடனடியாக, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் த.கி.பாக்கியலெட்சுமிக்கு அனுப்பினார். இது தொடர்பாக த.கி.பாக்கிய லெட்சுமி கூறியதாவது: கர்ப்பிணி பெண் ராஜராஜேஸ்வரிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக, உடுமலை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்யப்பட்டு.தொடர்ந்து அங்கு கடந்த 5-ம் தேதி விசாரணை மேற்கொள்ளப்பட்டது,’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE